2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஒருவேளை உணவைக்கூட சமைக்க முடியாத நிலையில் கொழும்பு மக்கள்

Freelancer   / 2022 மே 28 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எரிவாயு மற்றும் எரிபொருள் பிரச்சினை காரணமாக கொழும்பு வாழ் மக்களுக்கு ஒரு நேர உணவைக் கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. 

மக்கள் பொறுமையை இழந்தே வீதிக்கு இறங்குகின்றனர். அதனால் அரசாங்கம் விரைவாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் வடகொழும்பு பிரதான அமைப்பாளரும் பொருளாதார ஆலோசகருமான சீ.வை.பி.ராம் தெரிவித்தார்.

எரிவாயு, எரிபொருள் மற்றும் மண்ணெண்ணெய் இல்லாமை காரணமாக கொழும்பு வாழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினை தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“கொழும்பு மாவட்டத்தில் இருப்பவன் என்ற வகையில் கொழும்பு, வடக்கு, கொழும்பு மேற்கு, கொழும்பு மத்தியில் மக்கள் எதிர்கொண்டுவரும் கஷ்டங்களை கண்டு வருகின்றேன். 

அதிலும் குறிப்பாக தொடர்மாடி குடியிருப்புகளில் வாழும்பு மக்கள் எரிவாயு, எரிபொருள் பிரச்சினை காரணமாக பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.  

கொழும்பு பிரதேசத்தில் நாளாந்த வாழ்வாதாரத்துடன் வாழ்க்கையை கொண்டு செல்லும் மக்கள் மிகவும் கஷ்டமான நிலையை எதிர்கொண்டுள்ளனர். அதனால் அந்த மக்கள் நாள் ஒன்றுக்கு மூன்று வேளையல்ல, ஒரு வேளை உணவைக்கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது.

நாட்டில் பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினை தலைதூக்கி இருக்கின்றது. இந்த இரண்டு பிரச்சினைகளையும் வெற்றிகொள்ளவேண்டி இருக்கின்றது. இதன் மூலமே மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும். 

ஆனால் நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கவேண்டிய இடமான பாராளுமன்றத்திலும் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதை விட அவர்களின் பிரச்சினை தொடர்பாகவே கலந்துரையாடி வருகின்றனர். இந்த மாதம் பாராளுமன்றம் இரண்டு வாரங்கள் கூடிய போதும் மக்கள் எதிர்கொண்டுள்ள எந்த பிரச்சினைக்கும் தீர்வு காணப்படவில்லை.

மேலும் மக்கள் எரிவாயு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு முகம்கொடுத்துள்ள நிலையில், சமைத்து சாப்பிடுவதற்கு மண்ணெண்ணெய், ஒரு கட்டு விறகு கூட தேடிக்கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றனர். 

தொடர்ந்து பல நாட்கள் இந்த மக்கள் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய்க்கு வரிசையில் இருந்து விட்டு திரும்பிச் செல்கின்றனர். 

இவ்வாறான நிலையிலேயே கொழும்பு மக்கள் பொறுமையை இழந்து வீதியை மறித்து போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

அதனால் நாட்டின் ஏனைய பிரதேச மக்களைவிட கொழும்பு வாழ் மக்களே எரிவாயு, மண்ணெண்ணெய் இல்லாமல் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் எந்த பொருளை வாங்குவதாக இருந்தாலும் பணம் கொடுத்தே வாங்கவேண்டி இருக்கின்றனர். 

அதனால் கொழும்பு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு விரைவாக தீர்வுகாண அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும். 

குறிப்பாக சமையல் எரிவாயுகளை வழங்கி மக்களின் உணவுப்பிரச்சினைக்கு தீர்வுகாண உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் மக்கள் வீதிக்கி இறங்குவதை தடுக்க முடியாமல்போகும்” என்று குறிப்பிட்டார். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .