2025 நவம்பர் 19, புதன்கிழமை

’நீதியமைச்சரின் கருத்தை மறுதலிக்குக’

Yuganthini   / 2017 ஜூன் 20 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத அடிப்படையில் சிறுபான்மையினராகக் காணப்படும் சமூகங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் வெளிப்படையான கருத்துகளை முன்வைத்தமைக்காக, பிரபல்யமான சட்டத்தரணி ஒருவர் மீது, நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ விடுத்த எச்சரிக்கைக்கு, மனித உரிமைகள் கண்காணிப்பகம், கண்டனம் வெளியிட்டுள்ளது. இந்தச் சம்பவம், இலங்கையில் அண்மைக் காலத்தில் முஸ்லிம்கள் மீதும் கிறிஸ்தவர்கள் மீதும் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் தொடர்பில் முழுமையாக விசாரணை மேற்கொண்டு, வழக்குத் தொடர்வதில், அரசாங்கம் அடைந்துள்ள தோல்வியைக் காட்டுவதாகவும், அக்கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, அக்கண்காணிப்பகத்தால் இன்று (20) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே, இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த சனிக்கிழமை (17) கருத்துத் தெரிவித்த நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ, அண்மையில் நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில், கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் குறித்து சட்டத்தரணி லக்‌ஷான் டயஸ் தெரிவித்த கருத்துகளுக்காக, அவர் மன்னிப்புக் கோராவிட்டால், நீதித் தொழிலிருந்து வெளியேற்றவுள்ளதாகத் தெரிவித்திருந்தார். 2015ஆம் ஆண்டு முதல், கிறிஸ்தவர்கள் மீதும் அவர்களது வழிபாட்டிடங்கள் மீதும், சுமார் 200 தாக்குதல்களும் துன்புறுத்தல்களும் இடம்பெற்றதாக, தேவாலயங்களின் குழுவொன்று வெளியிட்ட அறிக்கையை, சட்டத்தரணி டயஸ், குறிப்பிட்டுக் காட்டியிருந்தார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த கண்காணிப்பகத்தின் ஆசியப் பணிப்பாளரான பிரட் அடம்ஸ், "பெருமளவிலான ஆபத்தில் காணப்படும் இலங்கையர்களுக்காக, எதிர்த்து நிற்கும் சட்டத்தரணியான லக்‌ஷன் டயஸை ஒடுக்குவதற்கு, நீதியமைச்சர் ராஜபக்‌ஷ எடுக்கும் நடவடிக்கைகளுக்கு, அரசாங்கத்தால் விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். டயஸின் சட்டத்தரணி அனுமதிப்பத்திரத்தை இல்லாது செய்யப்போவதாக மிரட்டுவதன் மூலமாக, அவரிலும் ஏனைய மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களிலும் தங்கியிருக்கும், ஆபத்தான அத்தனை குழுக்களையும், அரசாங்கம் அச்சுறுத்துகிறது" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், "பாதிக்கப்பட்ட சமூகத்தின் சார்பாக உரையாற்றிய, பிரபல்யமான மனித உரிமைகள் சட்டத்தரணியின் அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்யப் போவதாக, நீதியமைச்சர் விடுத்த எச்சரிக்கை தொடர்பாக, அரசாங்கம் எதுவும் செய்யாமலிருப்பது, இலங்கைக்கு வெளியேயும், அதிர்வலைகளை ஏற்படுத்தும். அரசாங்கத்தின் எதிர்வினையை, உற்றுநோக்கிக் கொண்டிருப்பதை, இலங்கையின் நண்பர்கள் உணர வேண்டும்" என்று குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X