2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

பிரதமருக்குப் புகழாராம்

Editorial   / 2017 ஓகஸ்ட் 02 , பி.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பீ.எம். முக்தார்

“பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தலைசிறந்த அரசியல் ஞானமும் தூர நோக்கும், பண்முக ஆளுமையுடைய ஓர் அரசியல் தலைவராவார். இப்படியானதொரு தலைவர், நாட்டுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் கிடைத்திருப்பதானது, நாட்டுக்கும் மக்களுக்கும் பாக்கியமாகும்” என, மேல் மாகாண சபை உறுப்பினரும் பேருவளை ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளருமான அல்ஹாஜ் இப்திகார் ஜெமீல் தெரிவித்தார்.

பேருவளை, சீனன்கோட்டை ஐக்கிய தேசியக் கட்சி அலுவலகத்தில், நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இங்கு மேலும் உரையாற்றும் போது கூறியதாவது,

“பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 40 வருட அரசியல் வாழ்க்கையைப் பூர்த்தி செய்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினராக, பிரதியமைச்சராக, அமைச்சராக, பலமுறை பிரதமராக, ஐக்கிய தேசியக் கட்சித் தலைவராகப் பதவி வகித்து, கடந்த 4 தசாப்தங்களுக்கு மேலாக, மக்களுக்கும் கட்சிக்கும் அளப்பரிய சேவைகளைச் செய்துள்ளார்.

"உலக நாட்டுத் தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்றுக் கொண்ட சிறந்த அரசியல் தலைவரான எமது பிரதமர், இன, மத, மொழி பேதமின்றி, கடந்த காலத்தில் அளப்பரிய சேவைகளைச் செய்துள்ளமையை, எவராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. சிறந்த அரசியல் அனுபவமுள்ள அவர், நீதியாகவும் நேர்மையாகவும் என்றும் செயல்பட்டு வருகிறார்.

"ஐக்கிய தேசிய கட்சிக்கு சிறந்த  தலைமைத்துவம் வழங்கி, கட்சியைச் சிறப்பாக முன்னெடுத்துச் செல்கிறார். அவரின் தலைமைத்துவத்துக்கு மதிப்பளித்து, கட்சியை வளர்க்க அவர் மேற்கொள்ளும் நல்ல முயற்சிகளுக்குப் பூரண ஒத்துழைப்பு வழங்குவது, அனைவரினதும் கடமையாகும்” என்றார்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பலரும், பிரதமரின் 40 வருட கால சேவையைப் பாராட்டி உரையாற்றினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .