2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

மலையக தமிழர் அபிலாசை ஆவண கடிதம் கையளிப்பு

Freelancer   / 2022 மார்ச் 23 , பி.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கான, இந்திய வம்சாவளி மலையக தமிழ் இலங்கையர் சார்பான அபிலாசை ஆவண கடிதத்தை, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி, கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையில் இன்று (23) கையளித்தது. 

கொழும்பு இந்திய இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர் வே. இராதாகிருஷ்ணன், உதயகுமார் எம்.பி, கே.டி. குருசாமி, பேராசிரியர் சோ. சந்திரசேகரம் ஆகியோர் கலந்துக்கொண்டனர். 

இந்திய தரப்பில் உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, துணை உயர்ஸ்தானிகர் வினோத் கே. ஜேகப், அரசியல் துறை செயலாளர் பானு பிரகாஷ்  ஆகியோர் கலந்துக்கொண்டனர்.   

இது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளதாவது,

மனம் திறந்த கலந்துரையாடலுடன் இந்த சந்திப்பு மிகவும் திருப்திகரமாக அமைந்தது. இலங்கையில் வாழும் தமிழர் ஜனத்தொகையில் சுமார் சரிபாதியான இந்திய வம்சாவளி மலையக தமிழ் இலங்கையர் தொடர்பான கூடிய அக்கறையை செலுத்த பிரதமர் நரேந்திர மோடியின் இந்திய ஒன்றிய அரசாங்கம் உறுதி பூண்டுள்ளதாக  இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்தார்.

இந்த பின்னணியில்,  இலங்கையின் முழுமைமிக்க குடிமக்களாக ஏனையோருடன் சமத்துவமாக வாழ விரும்பும் மலையக தமிழ் இலங்கையர் தொடர்பான இந்த அதிகாரபூர்வ ஆவணம் மிகவும் பயன்தருகிறது என அவர் மேலும் கூறினார். மலையக தமிழ் மக்களின் அனைத்து அபிலாசைகளையும் ஒருசேர பிரதிபலிக்கும் கோரிக்கைகள் உள்ளடங்கிய இத்தகையை ஆவணத்தை  தயாரித்து முன்வைத்துள்ளமை தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு தந்து மகிழ்ச்சிகளையும், பாராட்டுகளையும் இந்திய உயர்ஸ்தானிகர் பாக்லே தெரிவித்தார்.

இதன் அபிலாசை  ஆவண கடிதத்தை உடனடியாக பிரதமர்  நரேந்திர மோடியின் அவதானத்துக்கு முறைப்படி அனுப்பி வைப்பதாக அவர், தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழுவுக்கு  உறுதியளித்தார். 

மேலும் இனி வரும் எதிர்காலத்தில், இந்திய மற்றும் தமிழக அரசியல், சமூக, பரப்புகளில் இந்திய வம்சாவளி மலையக தமிழ் இலங்கையர் அதிக கவனத்தை பெற வேண்டும் எனவும், அதற்கான ஒத்துழைப்புகளை இந்த அரசு சார்பில்  இந்திய தூதகரம் வழங்கும் எனவும் அவர் மேலும் கூறினார்.    

அடுத்த வாரம் இலங்கை வருகைதரவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர், தமிழ் முற்போக்கு கூட்டணியை சந்திக்கும் போது இது தொடர்பில் மேலும் கலந்துரையாடப்படும். பிம்ஸ்டெக் மாநாடு முடிந்த உடன், இந்த ஆவண கோரிக்கைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாட விரும்புவதாகவும் பாக்லே மேலும் தெரிவித்தார்.

கூட்டணி தலைவர் மனோ கணேசன், இந்திய தூதுவர் கோபால் பாக்லேயிடம் கூறியதாவது, இந்த இருநூறு ஆண்டுகளில் ஒரு சமூகமாக நாம் பெற்றுள்ள வளர்ச்சி, பெறாத வளர்ச்சி, முகம் கொடுக்கின்ற இன்னல்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து ஆவன செய்ய தமிழ் முற்போக்கு கூட்டணி திடசங்கற்பம் பூண்டுள்ளது. அதன் ஆரம்பமே இந்த ஆவணமாகும்.

இலங்கையில் வட கிழக்கில் வாழும் ஈழத்தமிழர்களுடன் நாம் பிரிக்க முடியாத நல்லுறவு கொண்டுள்ளோம். அவர்களின் இன்னல்களை துடைக்க இந்தியா பலதும் செய்கிறது. அது தொடர வேண்டும். அதேவேளை அதே அக்கறையை எமது மக்கள் மீதும் இந்திய உட்பட உலகம் காட்ட வேண்டிய வேளை இன்று வந்து விட்டது.     

சுமார் பதினைந்து இலட்சம் இந்திய வம்சாவளி மலையக தமிழ் இலங்கையரில் பத்து விகிதமே தோட்ட தொழிலாளர்கள் ஆவர். ஒட்டு மொத்த மலையக தமிழ் இலங்கையரும் தோட்ட தொழிலாளர்கள் அல்ல என்பதையும், எமது சமூகத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியையும் இந்திய உட்பட உலகம் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .