2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

முழு நாட்டுக்கும் OMP பிரயோசனமானது

Editorial   / 2017 ஜூலை 27 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


"காணாமற்போனோர் அலுவலகம் (OMP) அமைப்பது, தமிழருக்கு மட்டுமல்ல, முழு நாட்டுக்கும் பிரயோசனமானது" என, தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவருமான மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில், புதன்கிழமை இரவு நடைபெற்ற அரசியல் விவாதத்தில், கடதல்கள் தொடர்பில் கருத்துக்களை முன்வைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இந்த விவாதத்தில் ஒன்றிணைந்த எதிரணியின் எம்.பியான உதய கம்மன்பில, ராவய பத்திரிக்கை ஆசிரியர் ஜனரஞ்சன ஆகியோரும் கலந்துகொண்டனர். 

"கடத்தல், காணாமற்போதல் என்பன தெற்கில் நடக்கும் போதும் சிங்களவர் ஒருவர் கடத்தப்படும் போதும், அதை அரச பயங்கரவாதம் என்று குற்றம் சாட்டுகிறீர்கள். அதுவே வடக்கில் நடக்கும் போதும் தமிழர் ஒருவர் கடத்தப்படும் போதும் அதை அரச நிர்வாகம் என்று கூறுகிறீர்கள். இது நியாயமா" எனஅவர் வினவினார்.

அங்கு அவர், தொடர்ந்து வாதிட்டு தன்னுடைய கருத்துக்களை முன்வைக்கும் போது, "கொழும்பில்,  வெள்ளை வானில் கடத்தப்படும் ஆபத்தை சந்தித்ததாக கூறப்படும் ரயன் ஜயலத் என்பவர், மருத்துவ மாணவர், ஒரு தமிழராக இருந்திருந்தால், அந்தச் சம்பவம் பற்றி யாரும் பேசியிருக்க மாட்டீர்கள். ஊடகங்களும் கைவிட்டிருக்கும். அவரை ஒரு புலியென எல்லோரும் கூறி, கதையை முடித்திருப்பீர்கள். சிங்களவரோ, தமிழரோ அனைவரையும் இந்நாட்டு பிரஜைகள் என்று பாருங்கள்" எனக் கேட்டுக்கொண்டார்.   

"இங்கு ஒரு சட்டம், அங்கு ஒரு சட்டம் இருக்க முடியாது. காணாமல் ஆக்கல் என்ற குற்றத்தை நாம் எலோரும் ஒழிக்க வேண்டும். அதன் ஓர் அங்கமாகவே இந்த காணமற்போனோர் தொடர்பான அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அவலம் வடக்கில் மட்டுமல்ல, தெற்கிலும் 1971, 1989 ஆண்டுகளில் இடம்பெற்றது. 
1971இல் பத்தாயிரம் பேர் காணாமல் போனதாக சொல்லப்பட்டது. 1989இல் மனோரி முத்தெடுகம ஆணைகுழுவின்படி 26,401 பேர் காணாமற் போனதாக சொல்லப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அன்று ஒரு மனித உரிமை போராளியாக இருந்து 60,000 பேர் காணாமற் போனதாக சொன்னார். இவர்கள், தெற்கில் காணாமல் போன பெரும்பாலும் சிங்களவர்கள். 
சமகாலத்தில், வடக்கு, கிழக்கிலும் கொழும்பிலும் தமிழர் காணாமற் போனார்கள்.

தருஷ்மன் அறிக்கையின்படி 40,000 பேர் காணமற்போயுள்ளனர் என கூறப்பட்டுள்ளது. சர்வதேச செஞ்சிலுவை சங்க அறிக்கையின்படி 16,000 பேர் என எண்ணுகிறேன். பரணகம ஆணைக்குழு 20,000 பேர் என்று கூறுகிறது. யுத்தத்தில் ஒரு இலட்சத்து 47 ஆயிரம் பேர்  காணாமற் போனதாக மன்னார் ஆயர் சொல்லியுள்ளார்" என்றார்.

எத்தனை பேர் காணாமல் போயுள்ளனர் என்ற விவரங்களை நாம் இந்த காணாமற் போனோர் அலுவலகம் மூலம் திரட்ட முடியும். இது மிகவும் முன்னேற்றகரமான ஒரு படி. எனவே,  அதை உருவாக்குவோம்.

கொழும்பில் இராணுவத்தினர், பெற்றோல் விநியோக சேவைகளுக்காக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இராணுவம் என்பது, ஒரு தங்கக் கத்தி என பெருமை பேசலாம். ஆனால், கத்தி தங்கமாக இருந்தாலும், குத்தினால் இரத்தம் வரும். எனவே இன்று சேவைகளில் ஈடுபடும் இராணுவத்தினர் நாளை ஆட்களை கடத்தலாம். இது நேற்று நடந்தது. இன்றும் நடக்கிறது. நாளையும் நடக்கலாம். எனவே காணாமற்போனோர் அலுவலகம் அமைப்பது, தமிழருக்கு மட்டுமல்ல, முழு நாட்டுக்கும் பிரயோசனமானது" என்றார்.     
        
  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X