2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

வடமாகாண துண்டு விழும் தொகை 2,322 மில்லியன் ரூபாய்

George   / 2014 டிசெம்பர் 04 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

- பொ.சோபிகா, யோ.வித்தியா

வடமாகாண சபையின் 2015ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில் நடைமுறை மற்றும் மீண்டெழும் வருமானமாக மத்திய அரசிடமிருந்து 12,800 மில்லியன் ரூபாய் கிடைக்கும் அதேவேளை, மீண்டெழும் செலவு 15,122.4 மில்லியன் ரூபாய்; என வடமாகாண முதலமைச்சரும் வடமாகாண நிதி அமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன், சபையில் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் வியாழக்கிழமை (04) நடைபெற்ற போது, முதலமைச்சர் வடமாகாண சபையின் நிதி விபரங்களை வெளியிட்டார்.

துண்டுவிழும் தொகைக்கு ஈடுசெய்யும் வகையில் மத்திய அரசு வருமானமாக 1,975 மில்லியன் ரூபாவும், மாகாண சபை வருமானமாக 347.4 மில்லியன் ரூபாவும் கிடைக்குமென எதிர்பார்ப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, வடமாகாண 2015ஆம் ஆண்டு மூலதன செலவுகளுக்காக 5287.8 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த நிதிக்கூற்றை சபையில் அங்கீகரிக்கும்படி வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் முதலமைச்சர் நிதிக்கூற்றை கையளித்தார்.

அமைச்சர்களுடன் மாத்திரம் கலந்துரையாடி மூலதன செலவுகள் விபரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் பூரண விளக்கம் தங்களுக்கு வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர் அன்ரனி ஜெகநாதன் ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.

மறைமுகமாக இந்தவிடயம் செய்ய முடியாது என்பதுடன், சபையின் உரிமைகளையும் மறுக்கவும் முடியாது. ஆகவே இது தொடர்பான பூரண அறிக்கை தருமாறும் முதலமைச்சரிடம் கோரியதுடன், முதலமைச்சர் சபையில் வழங்கிய 2015ஆம் ஆண்டுக்கான நிதிக்கூற்றை ஏற்றுக்கொள்வதாக அவைத்தலைவர் கூறியதுடன், வரவு – செலவுத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடலொன்று,  வெள்ளிக்கிழமை (05) முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாகவும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .