2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

இன்னும் 10 ஆண்டுகளுக்கு உதவிகள் தேவை: குருகுலராஜா

Kogilavani   / 2014 மார்ச் 13 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

போரினால் பாதிக்கப்பட்ட வடமாகாண மக்களுக்கு தொடர்ச்சியாக 10 வருடங்கள் உதவிகள் வழங்குவதன் மூலமே அவர்களின் வாழ்வாதாரத்தை கட்டி எழுப்ப முடியும்  என்று வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா தெரிவித்தார்.

கனடா நாட்டின் நிதியுதவியின் மூலம் உலக உணவு ஸ்தாபனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் நடவடிக்கையினை ஆராய்வதற்காக இலங்கைக்கான கனேடியத் தூதுவர் சில்லி வைற்றிங் (ளூநடடநல றூவைiபெ) வியாழக்கிழமை (13) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

வலி.வடக்கிலுள்ள வசாவிளான் பாடசாலை மற்றும் கீரிமலை நகுலேஸ்வர வித்தியாலயம் ஆகிய பாடசாலைக்குச் சென்று அங்கு வழங்கப்படும் உணவு தொடர்பில் ஆராய்ந்தார்.

தொடர்ந்து, தூதுவர் வடமாகாணக் கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜாவுடன் யாழ். நகுலேஸ்வரர் வித்தியாலயத்தில் சந்திப்பொன்றினை மேற்கொண்டிருந்தார்.

இச்சந்திப்புக் குறித்து வடமாகாண கல்வி அமைச்சர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இச்சந்திப்பு தொடர்பில் கல்வி அமைச்சர் மேலும் கூறுகையில், 

'யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த இலங்கைக்கான கனேடியத்தூதுவர், உலக உணவுத்திட்டத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் உணவு விநியோகத்தைப் பார்வையிட்டு இங்குள்ள உணவுத் தேவைகள் தொடர்பில் புரிந்து கொண்டுள்ளார்.

பாடசாலை மாணவர்களிற்கான உணவு விநியோகத்திட்டத்தை இவ்வருடத்தோடு நிறுத்தப்போவதாக உலக உணவுத்திட்ட ஸ்தாபனம் அறிவித்திருந்தது. இதனை  இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்குமாறு கோரியிருக்கின்றேன்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உலக உணவுத்திட்டம் எவ்வளவு முக்கியம் என்பது தொடர்பில் அவருடன் பேசியுள்ளோம். எங்கள் மாகாணத்தில் போருக்குப்பின்னர் மக்கள் படுகின்ற துன்ப துயரங்கள் நீங்கள் யாவரும் அறிந்த விடயம் மிக முக்கியமான மூன்று வேளை உணவை வழங்குவதென்பது ஒரு சவாலான ஒன்றாக மாறிவிட்டது.

குறிப்பாக அடிமட்டத்தில் இருக்கின்ற தொழில் வாய்ப்புக்கள் இல்லாத குடும்பங்களின் தாய்மார்கள் 10 வயதிற்குட்பட்ட தமது பிள்ளைகளுக்கு உணவு வழங்குவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றார்கள் என்பதை நாங்கள் அறிந்திருக்கின்றோம்.

தற்போது அரிசியின் விலை அதிகரித்துள்ளது. இது இன்னும் சில நாட்களின் மேலும் அதிகாரிக்கலாம் என்று எண்ணுகின்றோம். இதனால் நாங்கள் பெரும் சவால்களை எதிர்நோக்க நேரிடலாம். 

இங்கு விஜயம் மேற்கொண்டுள்ள கனடா நாட்டின் தூதுவரிடம் இந்த உணவுத்திட்டத்தை 2016 ஆம் ஆண்டு வரை நீடிக்குமாறு கோரியிருக்கின்றோம். இது தொடர்பாக சாதகமாகப் பரிசீலிப்பதாக அவர் எமக்கு நம்பிக்கை தெரிவித்திருக்கின்றார்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ச்சியாக 10 வருடங்கள் உதவிகள் வழங்குவதன் மூலமே அவர்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என்பதை உலகில் உள்ள பல நாடுகளில் பார்த்து அறிந்திருக்கின்றோம்.

போரினால் பாதிக்கப்பட்டு மீண்டும் எமது இடங்களுக்கு மீளக்குடியமர்ந்த பின்னர் இலங்கை அரசினால் எங்கள் மக்களுக்கு சரியான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனாலேயே எங்கள் தேவைகளுக்காக பல நாடுகளிடம் கோரவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

மேலும், 2020 ஆம் ஆண்டு வரையிலும் மக்களிற்கு போதியளவு உதவிகளை வழங்குவதால் மாத்திரமே யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களைக் கட்டியெழுப்ப முடியும் என்று தூதுவரிடம் தெரிவித்திருந்தேன்.

அத்துடன், நகுலேவரர் வித்தியாலத்தில் முன்னர் 600 மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்றுவந்த நிலையில் தற்போது 250 இற்கும் குறைவான மாணவர்களே கல்வி கற்று வருகின்றனர். இங்கு கல்வி கற்று வரும் மாணவர்கள் இன்று ஒரு சிறந்த கலை நிகழ்வை தூதுவர் முன்னிலையில் வழங்கியிருக்கின்றார்கள்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு நலிவடைந்துள்ள மாணவர்களை,  விளையாட்டு மற்றும் கலை நிகழ்வுகள் மூலம் தான் ஆற்றுப்படுத்த முடியும்' என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .