2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

பண மோசடி தொடர்பில் 24 முறைப்பாடுகள்

George   / 2014 டிசெம்பர் 15 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


யாழ்ப்பாணம் மாவட்டத்தின் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் பண மோசடி தொடர்பில் இவ்வருடம் இதுவரையான காலப்பகுதியில் 24 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் பிரிவின் விசேட குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி எம்.எவ்.எம்.பிரிடவுஸ், திங்கட்கிழமை (15) தெரிவித்தார்.

காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் பண மோசடி சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளமை தொடர்பில் அவரிடம் வினாவியபோது, அவர் தொடர்ந்து கூறுகையில்,

பண மோசடி, பணக்கொடுக்கல் வாங்கலில் ஏமாற்று செய்தல், வெளிநாடு செல்வதற்கு போலியான முகவர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாறும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.

வர்த்தக நடவடிக்கையில் காசோலை மூலம் கொடுக்கல் வாங்கல்களை செய்யும் வர்த்தகர்கள் அதற்கான பணத்தை பெறுவதில் சிக்கல்களை எதிர்கொள்வதுடன், ஏமாறும் சம்பவங்களும் அதிகரித்து காணப்படுகின்றன.

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக ஏமாற்றும் சம்பவங்கள் பருத்தித்துறை, வல்வெட்டித்துறை போன்ற கரையோர பிரதேசங்களிலே அதிகளவில் இடம்பெறுகின்றமை முறைப்பாடுகள் மூலம் தெரியவருகின்றது. எமக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி ஏமாற்றும் முறைப்பாடுகளே அதிகம்.

இதற்கு காரணம் வெளிநாடு செல்வதில் யாழ்ப்பாண மக்கள் அதிகம் மோகம் கொண்டவர்களாக காணப்படுகின்றனர். ஏமாற்றுகாரர்களின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாறுகின்றனர்.

இப்படியான சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு குறைவாகவே காணப்படுகின்றது. வெளிநாட்டுக்கு செல்லும் எதிர்பார்ப்பு கொண்டவர்கள், அரசாங்கத்தால் அங்கீகாரம் வழங்கப்பட்ட முகவரின் விபரங்களை நன்றாக தெரிந்து வைத்து கொள்ளவேண்டும்.

முகவரிடமோ, அல்லது அந்த முகவர் நிலையம் தொடர்பான அலுவலரிடம் பணம் கொடுத்தால், அதற்குரிய சரியான பற்றுச்சீட்டை பெற்றுக்கொள்ள வேண்டும்.

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி ஆள் கடத்தல் துணை முகவர்களாக யாராவது செயற்படுகின்றனர் என்பதை அறிந்தால் அது தொடர்பில் பொலிஸ் நிலையத்துக்கு தகவல்கள் வழங்குவதன் மூலம் அவ்வாறான நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கமுடியும்.

எமது பொலிஸ் பிரிவில் பண மோசடியில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக நீதிமன்றின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .