2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

நாவாந்துறை சம்பவம்: 61 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணை பெப்ரவரி 2 ஆம் திகதிக்கு ஒத்திவை

Super User   / 2011 டிசெம்பர் 13 , பி.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எஸ்.செல்வநாயகம்)

யாழ். நாவாந்துறையில் 'கிறீஸ் பூத' சர்ச்சையைத் தொடர்ந்து இராணுவத்தினரால் பொதுமக்கள் தாக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு  தாக்கல் செய்யப்பட்ட 61 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள்   தொடர்பான வழக்கு விசாரணயை உயர் நீதிமன்றம் பெப்ரவரி 2 ஆம் திகதிக்கு  நேற்று வியாழக்கிழமை ஒத்திவைத்தது.

பிரதம நீதியரசர் ஷிராணி ஏ பண்டாரநாயக்க, நீதியரசர்கள் என். ஜி. அமரதுங்க, கே. ஸ்ரீபவன் ஆகியோர் முன்னிலையில் இம்மனு  நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதையடுத்து அடுத்த விசாரணை டிசெம்பர் 13 ஆம் திகதிக்கு  ஒத்திவைக்கப்பட்டது

மனுதாரர்களில் ஒருவரான இருதயநாதன் வீனஸ் ரெஜி, தனது மனுவில் பிரதிவாதிகளாக பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ, இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரிய, பாதுகாப்புப் படைகளின் யாழ் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, பொலிஸ்மா அதிபர் என். இலங்ககோன், இராணுவத்தின் 51 ஆவது படையணித் தளபதி ஜாக வேல்கம, 512 ஆவது பயைடணியின் தளபதி அஜித் பள்ளவெல, பிரதி பொலிஸ்மா அதிபர் நீல் தலுவத்த, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், நெவில் பத்மதேவா, உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.சி.ஏ. பண்டார, யாழ் பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி சமன் சிகேரா, பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் நதீகா மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரை குறிப்பிட்டுள்ளார்.

தான் தமிழ் பேசும் நபர், வடமாகாணத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என்பதால் மாத்திரமல்லாமல் அடிப்படை உரிமைகளையும் மொழி உரிமைகளையும் உறுதிப்படுத்துவதற்கான வினைத்திறனான நடவடிக்கைகளை மதிப்பளித்து உறுதிப்படுத்தக் கோருவதற்கான உரித்துடைய இலங்கைப் பிரஜை என்ற அடிப்படையில் இந்த மனுவை தாக்கல் செய்வதாக இருதயநாதன் வீனஸ் ரெஜி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வடக்கு கிழக்கிலும் ஏனைய பகுதிகளிலும் சாதாரண பிரஜைகளை காயப்படுத்திய, கொலை செய்த, பொதுமக்களுக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய பொதுவாக கிறீஸ் பூதங்கள் என அறியப்பட்ட இனந்தெரியாத நபர்களின் அச்சுறுத்தலை எதிர்கொண்ட பல சம்பவங்கள் இடம்பெற்றமை குறித்து பரந்தளவு கரிசனைகள் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X