2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

இந்திய வீட்டுத்திட்டத்தில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 8,700 பேர் உள்வாங்கப்பட்டுள்ளனர்

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 28 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வடபகுதி மக்களுக்கென வழங்கப்படவுள்ள வீட்டுத்திட்டத்திற்கான புள்ளிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தெரிவில் யாழ் மாவட்டத்தில் 8700 பேர் இந்திய வீட்டுத் திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர் என்று பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்களஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ் மாவட்டச் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திபின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

'வீட்டுத் திட்டத்தை கட்டுவதற்கு முன்வந்த ஒப்பந்த நிறுவனத்திற்கு போகும் தரகுப் பணத்தை தடுக்கும் நோக்கில் நேரடியாக மக்களிற்கு பணத்தினை வழங்கி அவர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வீட்டை மேலதிக பணத்தினை சேர்த்து கட்டுவதற்கு ஏற்றவகையில் மக்களிடம் நேரடியாக பணத்தினை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2010ஆம் ஆண்டு ஜூன் இந்தியாவிற்கான பயணத்தை ஜனாதிபதி மேற்கொண்டிருந்த சமயம் வடபகுதி மக்களுக்கு 50,000 வீடுகள் வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் இணங்கிருந்தது.

இதற்கமைய இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 50,000 வீடுகளில் யாழ் மாவட்டத்திற்கு 8,700 வீடுகளும், கிளிநொச்சி மாவட்டத்திற்கு 7,100 வீடுகளும், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டத்திற்கு தலா 7,500 வீடுகளும், வவுனியா மாவடத்திற்கு 4,200 வீடுகளும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐம்பதாயிரம் வீடுகளில் 5 மாவட்டங்களுக்கும் 35,000 வீடுகளும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா 1000 வீடுகள் திருத்தத்திற்குமாக பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதுவரை 10000 வீடுகள் முன்னோடி வீட்டுத்திட்டங்களாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் 6000 வீடுகள் கிழக்கு மாகாணத்திற்கும் 3000 வீடுகள் மலையகத்திற்கும் வழங்கப்படவுள்ளன.

அத்துடன் அந்த வீட்டுத்திட்டத்திற்காக எந்தவிதமான பாரபட்சமும் இன்றி தெரிவு இடம்பெற்று பிரதேச செயலாளர்களினால் யாழ். அரச அதிபரிடம் சமர்பிக்கப்பட்டுள்ள மாவட்ட ஒருங்கிணைப்புகுழுவின் அனுமதியுடன் இந்திய வீட்டுத்திட்டத்திற்கான பயனாளிகள் தெரிவு இடம்பெற்றுள்ளது.

இந்த வீட்டுத்திட்டத்தில் முதற்கட்டமாக சாவகச்சேரி, தெல்லிப்பளை, மருதங்கேணி ஆகிய பிரதேச செயலர் பிரிவில் உள்ள 500 பேருக்கான காசோலைகள் எதிர்வரும் 2ஆம் திகதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் இந்திய தூதுவர் அசோக் கே.காந்தா ஆகியோரால் வழங்கப்படவுள்ளன' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X