2025 ஜூலை 23, புதன்கிழமை

'அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கு நிதி மாத்திரமல்ல, ஏற்ற ஆளணியும் வேண்டும்'

Niroshini   / 2015 டிசெம்பர் 17 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதியை வடக்கு மாகாணசபை உரிய காலத்தில், உரிய முறையில் பயன்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு மாகாண சபை மீது தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகிறது. அபிவிருத்தியை உரியவாறு முன்னெடுப்பதற்கு நிதி மாத்திரம் போதுமானது அல்ல.அதற்கு ஏற்ற ஆளணியும் வேண்டும் என வட மாகாண விவசாய, கமநலசேவைகள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார்.

வட மாகாண சபையின் 2016ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் தனது அமைச்சின் நிதி ஒதுக்கீட்டைச் சமர்ப்பித்து இன்று வியாழக்கிழமை உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

விவசாயத் திணைக்களத்தில் அகில இலங்கைச் சேவைத் தரத்தில் ஒரு மேலதிக விவசாயப் பணிப்பாளருக்கும் 14 பிரதி விவசாயப் பணிப்பாளர்களுக்கும் ஆளணி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.ஆனால், இந்த 15 ஆளணி வெற்றிடங்களும் இன்னமும் நிரப்பப்பட முடியாமல் உள்ளன. இப்படி எனது அமைச்சுக்குட்பட்ட திணைக்களங்களில் 555 ஆளணி வெற்றிடங்கள் உள்ளன.

 எனது அமைச்சுக்கு உட்பட்ட துறைகளினூடாக 2016ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்களுக்கென மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடையாக நிதி ஆணைக்குழுவிடம் நாம் 1,172 மில்லியன் ரூபாவைக் கேட்டிருந்தோம்.

ஆனால்,எமது தேவையின் மூன்றில் ஒரு பங்கையே அதாவது, 410 மில்லியன் ரூபாவையே  தந்திருக்கிறார்கள்.மேலும், பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியாக 26.5 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்த 436.5 மில்லியன் ரூபாய் மாத்திரமே அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கென நிதி ஆணைக்குழுவால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியாகும்.

அத்தோடு, மீண்டு வரும் செலவினங்களாக 976.95 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ஆகமொத்தம் நிதி ஆணைக்குழுவிடம் இருந்து 1413.45 மில்லியன் ரூபாய் நிதி மாத்திரமே எமக்குக் ஒதுக்கீடாகியுள்ளது.எமது அமைச்சால் மேற்கொள்ளப்பட்டுவரும் உணவு வழங்கல்,நீர்வழங்கல் மற்றம் சுற்றுச்சூழல் செயற்பாடுகளுக்கெனக் கடந்த ஆண்டைப் போன்றே இம்முறையும் தனியாக நிதி எதுவும் நிதி ஆணைக்குழுவால் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.

தனியார் காற்று மின் ஆலையுடன் பிரதம செயலாளர் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம், வணிக நிறுவனங்களுக்குரிய சமூக கடப்பாடாக 30 மில்லியன் ரூபாய் நன்கொடையாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அந்நிதியும் இப்பாதீடில் உள்ளடக்கப்பட்டிருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

2016 ஆம் ஆண்டில் நாம் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து நிறைவேற்ற இருக்கும் திட்டங்கள் சிலவற்றை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். நெல் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கோடு செய்கைப்பரப்பளவை அதிகரிக்கவும், கூடுதல் அறுவடையைத் தரக்கூடிய நெல்லினங்களையும் உவரைத் தாங்கக்கூடிய நெல் இனங்களையும் அதிகளவில் பயிரிடுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. 'பிஸ்கற்' போன்ற வெதுப்பக உற்பத்திகளை மேற்கொள்வதற்கென யுவ-309 என்ற புதிய நெல் இனம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. உணவுப்பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கோடு சோளச் செய்கை ஊக்குவிக்கப்படவுள்ளது.

விவசாய இரசாயனங்களினால் ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில்கொண்டு சேதன விவசாயம் ஊக்குவிக்கப்பட உள்ளது. பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கோடும், இரசாயனங்களின் பிரயோகம் இல்லாத பாதுகாப்பான உணவை வழங்கும் நோக்கோடும் காளான் செய்கை விரிவுபடுத்தப்பட உள்ளது.

மாம்பழ ஏற்றுமதி வர்த்தகத்தைக் கருத்திற்கொண்டு அடர்பயிர்ச்செய்கை என்னும் புதிய முறையில் மாமரப்பண்ணைகள் உருவாக்கப்பட உள்ளன. எகிப்தில் இருந்து புதிய மாமர இனம் தருவிக்கப்பட உள்ளது. வடக்கு கௌரவ ஆளுநர் எச். எம். ஜி. எஸ். பாலிகக்கார அவர்களின் முன்முயற்சியால், மத்திய அரசாங்கத்தின் ஊடாக, எமது மாகாண விவசாயப்பணிப்பாளரினது பங்கேற்புடனும் இதற்கான ஒப்பந்தம் அண்மையில் எகிப்தில் கைச்சாத்தாகியுள்ளது.

இலங்கையில் தற்போது பிரபல்யமாக உள்ள 'அப்பிள் கொய்யா' ஆளுநரின் முயற்சியினாலேயே தாய்லாந்தில் இருந்து எடுத்து வரப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. கார்த்திகைப் பூச்செடியின் மருத்துவப் பெறுமதிவாய்ந்த விதைகளின் ஏற்றுமதி வாய்ப்பைக் கருத்திற்கொண்டு சோதனை ரீதியாக கார்த்திகை பூச்செடிப்பண்ணை உருவாக்கப்பட உள்ளது.

எமது நீர்ப்பாசனத் திணைக்களம் இரணைமடுக்குளம், முத்தையன்கட்டுக்குளம், ஆகியவற்றின் புனரமைப்பிலும் தொண்டைமானாறு உவர்நீர்த் தடுப்பணையைப் புனரமைப்பதிலுமே கூடுதல் கவனம் செலுத்த உள்ளது.

பால் உற்பத்தியை அதிகரிக்கவும், வவுனியாவில் இயங்காது இருக்கும் நவீன பால் பதனிடும் நிலையத்தை இயங்கவைப்பதற்கும், கூட்டுறவு அமைப்புகளினதும் தனியார் முதலீட்டினதும் இணைந்த பங்களிப்பாக வடக்குக்கான பால்விநியோக வலையமைப்பு ஒன்றை ஒரு பொதுவான பெயரில் உருவாக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

நலிவடைந்திருக்கும் பனைசார் தொழில்களை வலுப்படுத்துவதற்கான திட்டங்களில் ஒன்றாகப் பதநீர் உற்பத்தியும் விற்பனையும் விரிவுபடுத்தப்பட உள்ளது. தொழில் முயற்சிகளின்போது பனையில் இருந்து தவறி வீழ்ந்து மரணமானவர்களின் குடும்பங்களுக்குத் தலா ஒரு இலட்சம் ரூபாய் உதவி தொகையாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .