2025 ஜூலை 23, புதன்கிழமை

'12 ஆயிரம் குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்க வேண்டியுள்ளது'

Niroshini   / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் 12 ஆயிரம் குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்க வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் வடமாகாண பிரதி பொது முகாமையாளரும் வடக்கின் வசந்தம் திட்டத்தின் முகாமையாளருமான டி.கே.பி.யு.குணதிலக திங்கட்கிழமை (14) தெரிவித்தார்.

கிளிநொச்சியில் திங்கட்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

12 ஆயிரம் குடும்பங்களுக்கான மின்சாரத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் இறுதிக்குள் வழங்கிவிட முடியும். கிளிநொச்சி மாவட்டத்தில் இன்னமும் 141 கிலோமீற்றர் தூரத்துக்கு மின் விநியோகம் விரிவுபடுத்த வேண்டியுள்ளது. அந்தப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறd.

11 கிராமங்களுக்கு மின் விநியோகிக்க வேண்டியுள்ளது. அதாவது, உழவனூர், புண்னைநீராவி, கண்ணநகர், புளியம் பொக்கனை, கூனாங்குளம், ஊரியான், வன்னேரி சோலை, சோலைநகர், பொன்னாவெளி, நேரடம்பன், அரசபுரம் போன்ற கிராமங்களுக்கே மின் விநியோகம் மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றார்.

மேலும்,கிளிநொச்சியில் இன்னும் 20 ஆயிரம் குடும்பங்களுக்கு மேல், மின்சாரம் வழங்கவேண்டும் என்று ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது.

இதேவேளை வீடுகளுக்கான உள்ளக மின் சுற்றைச் செய்து, மின்சாரத்தை பெற முடியாது, வறுமையில் உள்ள குடும்பங்களுக்கு கடன் அடிப்படையில் உள்ளக மின் இணைப்பு மற்றும் மின் விநியோகத்தை மேற்கொள்ளும் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தவுள்ளோம். இதில் விருப்பமுள்ள மக்கள் அந்த வசதியை பெற்றுக்கொள்ள முடியும்.

இதற்கென 40 ஆயிரம் ரூபாய் கடனாக வழங்கப்படும். இதில் உள்ளக மின் சுற்றினை நிறுவுவதற்கு 17 ஆயிரத்து 500 ரூபாயும் மிகுதி, மின்சார சபைக்கான மின் இணைப்புக்கான கட்டணமாகவும் அறவிடப்படும். இதனை 6 வருடங்களில் வருடாந்தம் 7 வீத வட்டியில் செலுத்த வேண்டும். மாதாந்த மின்சாரக் கட்டணத்துடன் மாதாந்த கடன் மீளளிப்புத் தொகையான 600 ரூபாயையும் சேர்த்து செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .