2025 ஜூலை 16, புதன்கிழமை

'இரத்மலானை இந்து கல்லூரியில் சேர்க்கப்பட்ட மகனைக் காணவில்லை'

Niroshini   / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வவுனியா நீதிமன்ற உத்தரவுக்கமைய சிறுவர் நன்னடத்தை அதிகாரியால் இரத்மலானை இந்துக் கல்லூரியில் சேர்க்கப்பட்ட எனது மகன் அதன் பின்னர் காணாமற்போயுள்ளார்.இது தொடர்பில் நாங்கள் பல இடங்களில் தேடிக்கொண்டிருந்தபோது, புலனாய்வாளர்கள் எனக்கூறி எங்களுக்கு தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்தியவர்கள் மகனைத் தேடவேண்டாம் என அச்சுறுத்தல் விடுத்ததாக அல்போன்ஸ் அன்ரன் அலெக்ஸாண்டர் என்பவர் சாட்சியமளித்தார்.

காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்கான காணாமற்போனோரின் உறவுகள் சாட்சியமளிக்கும் அமர்வு பிரதேச செயலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் சாட்சியமளித்த ஒருவரே இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

எனது மகன் ஜான்ஸன் 18 வயதாக இருக்கும் போது, 2009ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி விடுதலைப் புலிகளால் பிடித்துச் செல்லப்பட்டார். அதன் பின்னர், நாங்கள் சோன்போ முகாமுக்குச் சென்றோம். அதன்போது, மகன் வீரபுரம் முகாமில் உள்ளார் என எமக்குத் தகவல் கிடைத்தது. ஆனால்,அதை உறுதிப்படுத்த முடியவில்லை.

இந்நிலையில் கடந்த 2011ஆம் ஆண்டு மட்டக்களப்பில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் உங்கள் மகன் மட்டக்களப்பில் உள்ள இக்பால் எனப்படும் ஹோட்டல் பணிபுரிவதாகவும் அந்த ஹோட்டல் முதலாலி றிவாஸ் என்பவரிடம் சென்று மகனை பெற்றுக்கொள்ளுமாறும் கூறப்பட்டது. மகன் வவுனியா வைத்தியசாலைக்கு அருகில் அழுதுகொண்டிருக்கும் போது, மீட்டு வேலைக்குச் சேர்த்ததாக தொலைபேசியில் கதைத்தவர் கூறினார்.

அந்தத் தொலைபேசி அழைப்புக்கிணங்க அங்கு சென்றபோது, அங்கு அந்தக் ஹோட்டல் இருந்துள்ளது. ஆனால் முதலாளியின் பெயர் வேறாக இருந்தது. எங்கள் மகன் அங்கு இல்லையெனக் கூறப்பட்டது. ஏமாற்றத்துடன் திரும்பிய நாங்கள் தொலைபேசி அழைப்புத் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தோம்.

இதன் பின்னர் கடையில் சீனி வாங்கியபோது, சீனி சுற்றியிருந்த பத்திரிகையில் எனது மகனின் புகைப்படம் இருந்தது. அதில் அம்பேபுஸ்ச முகாமிலிருந்து விடுதலையான சிறுவர் போராளிகள் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, அந்த முகாமுக்கு அருகிலுள்ள இராணுவ முகாமுக்குச் சென்று அந்த இராணுவ முகாமின் பொறுப்பதிகாரியுடன் கதைத்தோம். அம்பேபுஸ்ச முகாம் மூடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். எனினும் தனக்கு அந்த முகாமில் பொறுப்பாக இருந்த இராணுவ அதிகாரியை தெரியும் எனக்கூறினார்.எனது மகனின் அங்க அடையாளங்களைக் கொண்டு எனது மகன் அந்த முகாமில் இருந்ததை அம்பேபுஸ்ச இராணுவ பொறுப்பதிகாரி உறுதிப்படுத்தினார். மேலும், எமது மகனுக்கு தலையில் காயம் ஏற்பட்டமையால், அவர் பழைய நினைவுகளை மறந்துள்ளதாகவும் கூறினார்.

மேலும், மகனை வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியதாக அந்த பொறுப்பதிகாரி கூறினார்.

வவுனியா நீதிமன்ற நீதிபதியிடம் சென்று நாங்கள் கேட்டபோது, அவர் சிறுவர் நன்னடத்தை பிரிவுக்கு கடிதம் எழுதித்தந்தார். அதனைக் கொண்டு சிறுவர் நன்னடத்தை அதிகாரியிடம் சென்ற போது, எமது மகனை கொழும்பு இரத்மலானை இந்துக் கல்லூரியில் சேர்த்துள்ளதாகக் கூறினார். இதனையடுத்து, அங்கு சென்று கேட்டபோது, கல்லூரி அதிபர் அவ்வாறானதொரு மாணவன் அங்கு இல்லையென பதிலளித்தார்.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் கூறிய போது, நீதிமன்ற உத்தரவுக்கமைய கல்லூரியில் சேர்க்கப்பட்டவர் காணாமற்போனமை தொடர்பில் வழக்கு தாக்கல் செய்வோம் எனக்கூறினார்.

அதன் பின்னர் எங்களுக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. மகனைத் தேடவேண்டாம், என தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியவர் மிரட்டினார்.மேலும், பண வசதியில்லாமையால் வழக்குத் தாக்கல் செய்யவில்லை' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .