2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

'ஒன்றுபடாவிட்டால் துரோகிகளாக பார்க்கப்படுவோம்'

Princiya Dixci   / 2017 ஜனவரி 28 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஸன்
 
ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் கருத்து முரண்பாடுகள் கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பால் நாட்டின் நலனுக்கான ஒன்றிணைந்து செயற்படுவது போன்று, வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழ்த் தலைமைகளும் கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்றுபட்டு செயற்பட வேண்டுமெனவும் அவ்வாறு செயற்படத் தவறுவோமாக இருந்தால் துரோகிகளாக அல்லது துரோகம் செய்தவர்களாகவே பார்க்கப்படுவோம் என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கைத்தொழில் வாணிபத்துறை அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
 
8ஆவது சர்வதேச வர்த்தக் கண்காட்சியின் ஆரம்ப நாள் நிகழ்வுகள், யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்று (27) நடைபெற்றது. இதன்போது நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழ் மக்களும் தமிழ்த் தலைமைகளும் நல்லாட்சியை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நீண்டகால யுத்தம் இந்த மாவட்டத்தை இந்த மாகாணத்தை மிகவும் பாதிக்கச் செய்தது. இம்மாகாணத்தில் இருந்து பல இலட்சம் மக்கள் பிற நாடுகளிலே வாழ்வதைப் பார்க்கின்றோம். தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் ஒன்று சேர்ந்த உருவாக்கிய இந் நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் இரண்டு வேறு கட்சிகளைக் கொண்டிருந்தாலும் இந்த நாட்டினுடைய நலன்களை நாட்டிலே நிரந்தரமான சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமென்று விரும்புகின்றார்கள்.
 
அதன் ஊடாக நமது நாட்டை ஒரு பொருளாதார வளமுள்ள நாடாக மாற்ற வேண்டுமென்பதற்காக, அவர்களுக்கிடையே இருக்கின்ற பல வகையான கருத்து வேறுபாடுகள் மற்றும் கொள்ளை வேறுபாடுகள் இருந்தாலும் இருவரும் கைகோர்த்து நல்லாட்சி என்ற பெயரிலே அந்த ஆட்சியை உருவாக்கியிருக்கிறார்கள். வடகிழக்கிலே வாழுகின்ற தமிழ் பேசும் மக்கள் நல்லாட்சியை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய தேவைப்பாடும் இருக்கின்றன. அதே போல கடந்த 30 வருடமாக துன்பத்திலும் துயிரத்திலும் இருக்கின்ற எமது மக்களின் கண்ணீரைத் துடைக்க வடகிழக்கிலே இருக்கின்ற அரசியல்வாதிகளும் இந்தச் சந்தர்ப்பத்தை சரியான முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டுமென நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
 
எங்களுக்கு இடையே கருத்த வேறுபாடுகள் இருக்கலாம். கொள்கை வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் எவ்வாறு அதே கருத்து கொள்ளை வேறுபாடுகளாய் இருக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் நாட்டிற்காக ஒன்றாக சேர்ந்து இருக்கின்றது போன்று வடக்கிழக்கிலுள்ள தமிழ் பேசுகின்ற தமிழ்த் தலைமைகளும் ஒன்றாக இணைந்து கொள்ள வேண்டும்.
 
இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்டிருக்கின்றவர்களுடைய வாழ்வை வளப்படுத்தி, அவர்களது கரங்களை பலப்படுத்த வேண்டும். அவர்களையும் சாதாரண ஏனைய மக்களோடு பொருளாதார வளத்தை பெற்றிருக்கின்றவர்களாக மாற்ற வேண்டும்.
 
அதேபோன்று, பல மாகாணங்களில் வாழ்கின்ற இஸ்லாமிய மக்களையும் அவர்கள் வாழ்ந்த இடங்களில் குடியமர்த்த வேண்டும். இந்தியாவில் இருக்கின்றவர்களையும்; சொந்த இடங்களுக்கு கொண்டு வர வேண்டும்.
 
தொழில் வாய்ப்பில்லாதிருக்கின்ற இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்க வேண்டும். இயங்காமல் இருக்கின்ற தொழிற்சாலைகளை மீள இயக்க வேண்டும்.
 
இத்தனைய விடயங்களில் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றுபடச் செயற்பட வேண்டும். இதனை அரசியல் தலைமைகள் நாங்கள் செய்யாமல் போவோமாக இருந்தால் இந் நாட்டில் வரலாற்றிலே தூரோகிகளாக அல்லது துரோகம் செய்தவர்களாக இந்த மக்களுடைய நலனைக் கவனிக்காதவர்களாக வரலாற்றைத் தவறைச் செய்தவர்களாக அரசியல்வாதிகளாக இருக்கின்ற நாம் பார்க்கப்படுவோமென்று வேதனையுடன் சொல்லிக் கொள்கிறேன்.
 
வடக்கு மாகாண சபை முதலமைச்சர் உள்ளிட்ட உறுப்பினர்களும் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் உள்ளிட்ட உறுப்பினர்களும் வடகிழக்கிலே இருக்கின்ற நாடாளுமன்ற, மாகாண சபை மற்றும் கட்சிகளின் தலைமைகள் என அனைவரும் ஒன்று சேர்ந்து நாம் ஏற்கனவே கூறிய வளங்களை மக்களுக்குப் பெற்றுக் கொள்கின்ற விடயத்தில் ஒன்றுபட்டு உழைப்போமாக இருந்தால் இந்த இரண்டு மாகாணங்களும் எதிர்காலத்திலே வளர்ச்சிப் பாதையில் பயணிக்க முடியும்.
 
இதற்கு உதவி செய்ய இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் எமக்கு ஆதரவாக இருக்கின்றன. அதே போன்று தென்னிலங்கையிலும் நல்ல மனமுடைய அரசியல் தலைமைகளும் இருக்கின்றனர். ஆகவே நீண்டகாலமாக இருக்கின்ற இனப்பிரச்சனைக்கும் தீர்வை காண்பதோடு பொருளாதார வளமுள்ள பிரதேசமாக வடக்கையும் கிழக்கையும் நாங்கள் அபிவிருத்தி செய்ய முடியும்.
 
இதற்கு நாம் ஒன்றுபட்டு செயற்படுவோமாக இருந்தால் உதவி செய்ய வெளிநாடுகளில் உள்ளவர்களும் தயாராக உள்ளனர். அவர்களை எல்லாம் அழைத்து அவர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்கி இந்த மக்கள் எதிர்நோக்குகின்ற தொழில் இல்லாப் பிரச்சனை, பொருளாதார பிரச்சனை உள்ளிட்டவற்றிற்கு தீர்வைக் காண வேண்டும். இதற்காக இந்த வருடத்தில் வடகிழக்கில் அபிவிருத்தி மாநாடொன்றையும் நடத்தவிருக்கின்றோம். அதனூடாக அபிவிருத்தியை செய்ய முடியுமென்ற நம்பிக்கை உள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X