2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

‘ஓடிக்கொண்டே திரும்பிப் பார்த்தேன்; இரும்பினால் தாக்கிக்கொண்டிருந்தனர்’

Kogilavani   / 2017 பெப்ரவரி 02 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

“மைதானத்தில் ஆடிக்கொண்டு இருந்த சிலர், எம்மைத் தாக்குவதற்காக ஓடிவந்தனர். அதனைக் கண்ட நான் ஓடினேன். ஓடிக்கொண்டே திரும்பிப் பார்க்கும் போது, எனது நண்பனான ஜெயரட்ணம் தனுஷன் அமலனை (உயிரிழந்தவர்) சூழ்ந்து நின்றிருந்தவர்கள், இரும்புக் கம்பிகள் மற்றும் கொட்டன்கள் கொண்டு தாக்கிக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட நான், திரும்பி ஓடி வந்த போது, நண்பன் நினைவற்றுக் கிடந்தான்” என, அமலனின் நெருங்கிய நண்பரான செல்வரட்ணம் அன்ரனி பிரகாஸ் சாட்சியமளித்தார்.

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையில் வருடாந்தம் இடம்பெறுகின்ற பொன் அணிகள் கிரிக்கட் போட்டி, 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதியன்று, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி   மைதானத்தில் இடம்பெற்றது.

அந்த மைதானத்தில் வைத்து, சென்.பற்றிக்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான ஜெயரட்ணம் தனுஷன் அமலன் (ஒரு பிள்ளையின் தந்தை) அடித்துக் கொல்லப்பட்டார்.

இந்தக் கொலைச் சம்பந்தமான வழக்கு, யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் தொடர் விசாரணைக்கு நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே, செல்வரட்ணம் அன்டனி பிரகாஸ், மேற்கண்டவாறு சாட்சியமளித்தார். இவர், வழக்கின் மூன்றாவது சாட்சியாவார். அவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில்,  

“வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையில், வருடாந்தம் நடைபெறுகின்ற பொன் அணிகள் கிரிக்கட் போட்டி, 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்றது. இதன் போது, நாங்கள் மைதானத்தில் இருந்தோம்.

அப்போது மைதானத்தில் ஆடிக்கொண்டு இருந்த சிலர், எம்மை நோக்கி, அதுவும் தாக்குவதற்காக ஓடிவந்தனர். இதை கண்ட நான், ஓடினேன். நான் ஓடிக்கொண்டே திரும்பி பார்க்கும் போது, என்னுடைய நண்பனான ஜெயரட்ணம் தனுஷன் அமலனை (உயிரிழந்துவிட்டார்) சூழ்ந்துகொண்டனர்.

அவ்வாறு சூழ்ந்துகொண்ட அவர்கள், இரும்பு கம்பிகள் மற்றும் கொட்டன்கள் கொண்டு எனது நண்பனை தாக்கி கொண்டு நின்றார்கள். இதை கண்ட நான், திரும்பி ஓடி வந்த போது, நண்பன் அமலன் நினைவற்று கிடந்தான். அவ்வீதியால் சென்ற காரை மறித்து, அமலனை அதில் ஏற்றிக்கொண்டு,  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அவனை கொண்டுச் சென்றோம். ஆனால், அங்கு அவன் உயிரிழந்து விட்டான் என வைத்தியர்கள் கூறினர்” என்றார்.

அத்துடன், எதிரி கூண்டில் நின்ற 1ஆம் சந்தேக நபரையும் அவர், அடையாளம் காட்டினார்.

இந்த வழக்கில், சிவசண்முகநாதன் மதுஷன், இந்திரசீலன் பிருந்தாபன், ரமேஷ் வெண்டில்கரன், நேசரட்னம் கஜேந்திரன், நாகராஜா காந்தரூபன் மற்றும் சுந்தரலிங்கம் பிரகாஷ் ஆகிய 6 பேருக்கு எதிராகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்தக் கொலை வழக்கு, கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதி, நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் முதற் தடவையாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.  குற்றஞ்சாட்டப்பட்ட அறுவரும் மன்றில், அன்று ஆஜராகவில்லை.
சந்தேகநபர்களுக்கு அழைப்பாணை விடுக்குமாறு அவர்கள் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி மன்றில் கோரினார். அதற்கிணங்க அழைப்பாணை விடுக்கப்பட்டு, கடந்த செப்டெம்பர் மாதம் 22 ஆம் திகதியன்று சந்தேகநபர்கள், மேல் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதன்போது, அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டது.

இதேவேளை, குறித்த வழக்கானது, 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதியன்று,  யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு  எடுத்துக்கொள்ளப்பட்டது.

அன்று இடம்பெற்ற விசாரணையில், சந்தேகநபர்கள் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி, குற்றத்தின் தள வரைபடம், மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றை கோரியிருந்தமையால் வழக்கு, நேற்று வரைக்கும்  ஒத்திவைக்கப்பட்டது.

கோரப்படும் ஆவணங்கள், டிசெம்பர் 8 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும். அதற்கும் மேலதிகமாக ஆவணங்கள் தேவைப்படின், உரிய விண்ணப்பங்கள் ஜனவரி 5 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக்கொள்ள வேண்டும். அதன் பிறகு எந்த ஆவணங்களும் கோரமுடியாது என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

பெப்ரவரி மாதம் 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். இதன்போது, எந்தவித கோரிக்கைகளையும் முன்வைக்க முடியாது.  மேலும், அன்றைய தினங்களில் ஆஜராகுமாறு சாட்சியங்களுக்கும் அழைப்பாணை விடுக்கப்படாது என நீதிபதி, அன்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று சாட்சியமளித்த 3 ஆம் சாட்சியான செல்வரட்ணம் அன்டனி பிரகாஸின் சாட்சியம், முன்னுக்கு பின் முரணாக காணப்படுகின்றது எனவும், குறித்த சாட்சி, வட்டுக்கோட்டை  பொலிஸ் நிலையத்தில் 2 தடவையும், ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் 2 தடவையும் குறித்த சம்பவம்  தொடர்பில் வாக்குமூலமளித்துள்ளார்.

எனவே,  ஊர்காவற்றுறையில் வழங்கிய வாக்கு மூலத்தின் பிரதியை, சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி பெற்றுத்தந்தால், சாட்சியிடம் குறுக்கு விசாரணை செய்ய ஏதுவாக இருக்கும் என சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கோரிநின்றார்.

இந்நிலையில், மேற்படி கொலை வழக்கு  தொடர்பான மேலதிக விசாரணைகள், இன்று, மற்றும் நாளை ஆகிய தினங்களுக்கு நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X