2025 ஜூலை 21, திங்கட்கிழமை

'கூட்டமைப்பினர் ஆதரவு வழங்க வேண்டும்'

Niroshini   / 2015 டிசெம்பர் 27 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

எமது பேரவை இன்று தொடக்கம் தனது காரியங்களில் முழு மூச்சுடன் இயங்கத் தொடங்குகின்றது. அதற்கான சகல ஒத்துழைப்புக்களையும் சகல மட்டத் தமிழ்ச் சகோதர சகோதரிகளும் முக்கியமாக எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் சகலரும் அதற்கு ஆதரவு வழங்க வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாம் கட்ட கூட்டம்  இன்று  ஞாயிற்றுக்கிழமை காலை யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

தமிழ் மக்கள் பேரவை தொடங்கிய நாள் முதல் சில விசித்திரமான விளைவுகளையும் விமர்சனங்களையும் நான் பார்த்துக் கவனித்து வருகின்றேன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான ஒரு கட்சி உதயம் என்றது ஒரு செய்தி. விக்னேஸ்வரன் தலைமையில் ஒரு மாற்றுக் கட்சி என்றது இன்னொரு செய்தி. தேர்தலில் தோற்றவர்களுடன் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூட்டு என்றது மற்றுமொரு செய்தி. உங்கள் கட்சியை நாங்கள் ஆதரிப்போம் என்று பல மின்னஞ்சல்கள் வடக்கிலும் கிழக்கிலும் இருந்து வந்து கொண்டிருக்கின்றன.

 இவை அனைத்துமே பிழையான அடிப்படையில் வெளியிடப்பட்ட செய்திகளும் கருத்துக்களும் என்று முதற்கண் கூற விரும்புகின்றேன்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் திரு.சம்பந்தன் அவர்களை நான் கொழும்பில் சந்தித்தேன். பல விடயங்களைப் பற்றிக் கருத்துப் பரிமாறிக் கொண்டோம். அப்போது எமது பேரவையின் உண்மை நிலையை, அந்தஸ்தை, குறிக்கோளை, தூரநோக்குகளை அவருக்குத் தெளிவுபடுத்தினேன்.

அப்போது அவர் கூறினார்,'மக்கள் இயக்கமாக ஒரு இயக்கம் பரிணமிப்பதை நாங்கள் வரவேற்க வேண்டும். மக்கள் மட்டத்தில் இருந்து சகலரது கருத்துக்களும் கரிசணைகளும் வெளியிடப்பட வழியமைத்துக் கொடுக்கப்படுமானால் அதுவே ஜனநாயகம்' என்றார்.

மக்களின் கருத்துக்களை அறியும் ஒரு நடவடிக்கையாகவும் மக்களிடம் இருந்து பெறும் கருத்துக்களை ஒழுங்குபடுத்தி வெளியிடும் நிறுவனமாகவும் மக்கள் நலம் காக்க வேண்டிய மக்கள் பிரதிநிதிகளுக்கு உறுதுணையாக இருப்பதற்காகவும் எமது உரிமைகளை வென்றெடுக்க தமிழ் மக்களை ஒன்று சேர்க்கும் ஒரு இயக்கமாகவுமே தமிழ் மக்கள் பேரவை உருவெடுத்துள்ளது.

எமது மக்கள் இயக்கம் கருத்துக் கணிப்பில்தான் ஈடுபட முனைந்துள்ளது. தனி மனிதர்களின் தலைமையை நாங்கள் குறை கூறவில்லை. ஆனால் ,வருங்காலத் தமிழ் பேசும் மக்களின் வாழ்வு தனி மனித விருப்பு, வெறுப்பு, அறிவு, ஆற்றாமை என்பவற்றில் மட்டும் தங்கியிருப்பது சரியா என்ற கேள்வியை நாம் முன்னெடுக்கின்றோம்.

இப்பொழுதே தமிழர்கள் யாவரும் சேரப் பார்க்கின்றார்கள் என்ற ஒரு பீதி தென்னிலங்கையில் உருவாகி வருவதைக் காணக் கூடியதாக உள்ளது. அதற்கு இடமளிக்கக் கூடாது என்ற கருத்தும் அங்கு விரவி வருகின்றது. இதில் ஒரு விடயத்தை நாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். எந்தக் கட்சியாக இருந்தாலும் சிங்கள மக்களிடையே தமிழர்கள் சம்பந்தமாகச் சில பொதுக் கருத்துக்கள இருந்து வருவதை நாங்கள் உய்த்துணர வேண்டும்.

தமிழர்களைத் தழைக்க விட்டால் எமக்கு ஆபத்து என்ற ஒரு அடிப்படைக் கருத்து அங்கு சென்ற நூற்றாண்டிலிருந்து நிலவுகின்றது. ஆகவே தமிழர்களுள் சிலரை நாங்கள் எங்கள் கட்டுப் பாட்டுக்குள் வைத்துக் கொண்டு அவர்கள் மூலமாகத் தமிழ் மக்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற ஒரு எண்ணம் பெரிய கட்சிகளின் தலைமைப் பீடங்களிடையே பொதுவாக இருந்து வருகின்றது. தமிழ் மக்களை எமக்குச் சார்பாகப் பாவிக்க வேண்டும். ஆனால் எழும்ப விடக்கூடாது என்பது அவர்கள் குறிக்கோள்.

ஆகவே தமிழ் மக்கள் மட்டத்தில் ஒரு இணைத் தலைமைத்துவத்துடன் பரந்து பட்ட ஒரு மக்கள் இயக்கம் உருவாகின்றது என்றால் அது தெற்கில் உள்ள பலருக்கு வயிற்றைக் கலக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ஆனால் எமது தமிழ் மக்கள் சிலரிடையே அப்பேர்ப்பட்ட ஒரு எதிர்மறையான கருத்து நிலவுவதுதான் மனவருத்தத்தைத் தருகின்றது.

எமது பேரவை இன்று தொடக்கம் தனது காரியங்களில் முழு மூச்சுடன் இயங்கத் தொடங்குகின்றது. அதற்கான சகல ஒத்துழைப்புக்களையும் சகல மட்டத் தமிழ்ச் சகோதர சகோதரிகளும் முக்கியமாக எமது தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் சகலரும் அதற்கு வழங்க வேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X