2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

'காணாமல் போனோருக்கான நீதி கிடைக்க சகலரும் களமிறங்க வேண்டும்'

George   / 2017 ஜனவரி 26 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.விக்னேஸ், எஸ்.நிதர்சன், எஸ்.ஜெகநாதன்

“பலவந்தமாகக் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் போராட்டத்துக்கு வலுச்சேர்த்து, நீதியைப்பெற, சகல மட்டத்திலும் போராட்டங்கள் விரிவுபடுத்தப்பட வேண்டும்” என வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம், புதன்கிழமை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “பலவந்தமாகக் கடத்தப்பட்டு, காணாமல் போகச் செய்யப்பட்டவர்களை விடுவிக்கவும் அவர்களுடைய உறவினர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்கவும், நாம் விரைந்து செயற்பட வேண்டியுள்ளது.

போர் நடைபெற்ற போதும், போரின் இறுதித் தருணங்களிலும், போருக்குப் பின்னரும், ஆயிரக்கணக்கில் எமது இளைஞர்களும், யுவதிகளும் கடத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு கடத்தப்பட்டவர்கள் அரச ஆயுதப் படைகளினால் கடத்தப்பட்டனர் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

கடத்தல்களின் பின்னணியில் அரசாங்கமே இருந்தது என்பதற்கு, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆதாரங்கள் நிருபிக்கப்பட்டு உள்ளன. எனினும், அரசாங்கம், இப்பிரச்சினையில் பொறுப்புச் சொல்லத் தயார் நிலையில் இல்லை.

எனினும், அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்ற கோரிக்கையினையும் கால அவகாசத்தினையும் தமிழ்த் தரப்புக்கள் தொடர்ச்சியாக முன்வைத்தும் பயனில்லை.

ஆட்சி மாற்றத்தின் வாயிலாக, எமது மக்களின் வாக்குகளால் ஆட்சிபீடம் ஏறிய மைத்திரி – ரணில் அரசாங்கம் கூட, நீதியை தருவதற்கு தயாரில்லை. மாறாக, இவ் அரசாங்கம், பிரச்சினையைத் தமிழ் மக்களிடத்தில் இருந்து தணித்து, சர்வதேசத்திடம் இருந்து தப்புவதற்கே முயற்சிக்கின்றது.

நல்லாட்சி என்று கூறிக் கொள்ளும் இவ்வரசாங்கம், பதவியேற்று இரண்டு வருடங்கள் கடந்து விட்டன. காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் கண்ணீருக்குக் கூட அது செவிசாய்க்கவில்லை. இவ்வாறான நிலையில், எங்களுடைய உறவுகள் நீதிகோரி உண்ணாவிரதத்தினை ஆரம்பித்துள்ளனர்.

வவுனியாவில், உணவின்றி போராடிக் கொண்டிருக்கும் தாய்மாருக்கு, எமது ஆதரவையும் வெளிப்படுத்த வேண்டியுள்ளது” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X