2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

'கொழும்பின் நடவடிக்கைகள் நல்லிணக்கம் அல்ல'

George   / 2016 ஜூன் 01 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

'நல்லிணக்கத்துக்கான நடவடிக்கை எடுக்கப்படுவது உண்மை. ஆனால் அது, கொழும்பில் இருந்தே எடுக்கப்படுகிறது. அது தொடர்பில்  என்னுடன் கலந்துரையாடப்படுவதில்லை. நல்லிணக்கம் பற்றி பேசும் போது, பாதிக்கபட்டவர்களின் மனநிலை அறிந்து அவர்களின் தேவை என்ன என அறிந்து அதன் பின்னர் கொண்டுவருவதே நல்லிணக்கம். அதை விட்டுவிட்டு கொழும்பில் இருந்து நடவடிக்கை எடுப்பது நல்லிணக்கம் இல்லை' என, நோர்வே நாட்டின் வெளிவிவகார அமைச்சின் இராஜாங்க செயலாளர் டோர் ஹாட்றெனிடம் தான் தெரிவித்ததாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கு இன்று புதன்கிழமை (01) விஜயம் மேற்கொண்ட நோர்வே நாட்டின் வெளிவிவகார அமைச்சின் இராஜாங்க செயலாளர், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை, கைதடியில் உள்ள முதலமைச்சரின் செயலகத்தில் சந்தித்தார். இச்சந்திப்பின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து கூறியதாவது,

'இலங்கையில் மேற்கொள்ளப்படும் நல்லிணக்கம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு முழுமையான உதவிகளை தாம் செய்யவுள்ளதாக என்னிடம் தெரிவித்த இராஜாங்கச் செயலாளர், அது தொடர்பில் என்னுடைய கருத்தையும் கேட்டறிந்தார்.

நிலங்களை இழந்த மயிலிட்டி மக்கள், மீள்குடியேறுவதற்கு காத்திருக்கும் இச்சமயத்தில், அதனை விடுவிக்க முடியாது என இராணுவம் கூறுவது அநியாயம். போர் முடிந்து 7 வருடங்கள் ஆகின்ற நிலையில், மயிலிட்டி பகுதியை விடாமல் இருப்பது பிழை எனவும் நான் அவரிடம் கூறினேன். காரணங்களை நொண்டி சாட்டாகக் கூறி, நிலங்களை விடாமல் இருப்பது பிழை என்பதையும் சுட்டிக்காட்டினேன். இவை அனைத்தையும் தான் அறிவதாகவும், தான் இதற்கு முன்பு தூதுவராக இருந்த போது இவ்வாறான பல விடயங்களை அவதானித்ததாகவும் நோர்வேஇராஜாங்க செயலாளர் கூறினார்.

தாம் முடிந்த வரை இருவருக்கும் இடையில் நல்லிணக்கத்தினை கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாகவும் இது தொடர்பில் பலருடன் பேசி எவ்வாறு நல்லிணக்கத்துக்கான செயற்திட்டதை வகுக்க உடந்தையாக இருப்பதாகவும் இராஜாங்க செயலாளர் கூறினார்.

சமஸ்டி தீர்வு தொடர்பாக, சிங்கள மக்கள் மத்தியில் பிழையான ஒரு விளக்கம் உள்ளது. அவர்கள் சமஸ்டி என்பதை பிரிவினை என பார்க்கிறார்கள். அதை அவர்களுக்கு விளக்க வேண்டிய அவசியம் சிங்கள அரசியல் தலைமைகளுக்கு உண்டு. எம்மில் சிங்களம் தெரிந்த நான்,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் இது சார்ந்த விளக்கத்தினை எடுத்துரைப்போம். அதன் அவசியம் எமக்கும் உள்ளது. ஏனென்றால், ஒரு தீர்வை அடையாளப்படுத்தி மக்கள் தீர்ப்புக்காக விடும்போது அதற்கு எதிராக மக்கள் வாக்களிக்க கூடும்' எனவும் இராஜாங்க செயலாளரிடம் கூறியதாக முதலமைச்சர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X