2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

'சுட்டபடி ஓடி வந்தவர்கள் இரும்பு கம்பிகளால் தாக்கினர்'

Menaka Mookandi   / 2016 டிசெம்பர் 02 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

'ஹயஸ் வாகனத்தின் கதவுப் பக்கமாக கமல்ஸ்ரோன் விழுந்து கிடந்தார். பின் சீற்றுக்கு கீழே இருந்த எனது மகனை கம்பியால் குத்தினார்கள். என்னுடைய மகனை அடித்தவர்களை இழுத்து விட்டு ஓடுமாறு காட்டுப்பக்கமாக எனது மகனை தள்ளிவிட்டேன். அப்போது திரும்பி பார்த்த போது, நல்லைநாதனுக்கும் யோகராஜாவுக்கும் வெட்டு வீழ்ந்தது. சிவாஜிலிங்கம் வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகி குப்புற கிடந்தார்' என நாரந்தனை இரட்டை படுகொலை வழக்கின் 21ஆவது சாட்சியும், முன்னாள் நாடளுமன்ற உறுப்பினரும் தற்போதைய வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலங்கத்தின் வாகன சாரதியாக இருந்த அன்டன் ஜெகநாதன், வியாழக்கிழமை (01) யாழ் மேல் நீதிமன்றில் சாட்சியமளித்திருந்தார்.

தொடர்ந்து அவர் சாட்சியமளிக்கையில்,

'நாரந்தனை என்னும் இடத்தில் நாங்கள் சென்ற வாகனத்தின் முன் குறுக்காக ஒரு ஹன்ரர் ரக வாகனம் நிறுத்தப்பட்டது. வாகனத்தில் இருந்து இறங்கியவர்கள் சுட்டபடி ஓடிவந்து எங்கள் வாகனத்தின் முன்கண்ணாடிகளை அடித்துடைத்தார்கள்.

நான் சாரதி இருக்கையில் இருந்து இறங்க முற்பட்ட போது எனக்கு இரும்பு பைப்பினால் அடித்தார்கள். எல்லாரும் இறங்க முற்பட்ட போது வெட்டுக்களும் அடிதடிகளும் சரமாரியாக வீழ்ந்தது.

என்னுடைய மகன் எங்களுடைய வாகனத்திலே வந்தவர். கமல்ஸ்ரோனும் என்னுடைய மகனும் ஒன்றாக படித்தவர்கள். நான் இறங்கிய போது ஹயஸ் வாகனத்தின் கதவுப்பக்கமாக கமல்ஸ்ரோன் விழுந்து கிடந்தார். பின் சீற்றுக்கு கீழே இருந்த எனது மகனை கம்பியால் குத்தினார்கள். என்னுடைய மகனை அடித்தவர்களை இழுத்து விட்டு மகனை ஓடுமாறு காட்டுப்பக்கம் தள்ளிவிட்டேன். அப்போது திரும்பி பார்த்த போது நல்லைநாதனுக்கும் யோகராஜாவிற்கும் வெட்டு வீழ்ந்தது. சிவாஜிலிங்கம் வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகி குப்புற கிடந்தார்.

கேள்வி: கமல்ஸ்ரோன் வீழ்ந்து கிடந்ததாக சொன்னீர்கள். கமல்ஸ்ரோனுக்கு எங்கு வெட்டு விழுந்திருந்தது?

பதில்:- கமல்ஸ்ரோனுக்கு தலையில் வெட்டு வீழ்ந்தது. (தலையினை பாவனை செய்து தொட்டுக்காட்டுகிறார்)

கேள்வி:- உங்கள் மகனுக்கு எங்கு காயம் ஏற்பட்டது என கூறமுடியுமா?

பதில்:- அவரின் முதுகில் அடித்த காயம் இருந்தது. சிவாஜிலிங்கத்திற்கும் காயம் ஏற்பட்டது. குறிப்பாக எங்கு அடி வீழ்ந்தது என்று எனக்கு தெரியாது

கேள்வி:-அதன் பின்னர் நீங்கள் எங்கு நின்றீர்கள்?

நானும் மகனும் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையம் சென்றுவிட்டோம். எங்களை பொலிஸ் தங்கள் ஜீப் வாகனத்தில் ஏற்றி கொண்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர். என தனது சாட்சியத்தினை பதிவு செய்திருந்தார்.

சாட்சி விசாரணைகளுக்கு மன்றிற்கு சமூகமளிக்க தவறியிருந்த அன்ரன் ஜெகநாதனுக்கு புதன்கிழமை (30) பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் வியாழக்கிழமை (01) ஊர்காவற்துறை பொலிஸாரினால் மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.

கடந்த 2001ஆம் ஆண்டு ஊர்காவற்துறை தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற தமிழ்தேசியக்கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடாத்தி இருவரை படுகொலை செய்த வழக்கு விசாரணை 14 வருடங்களின் பின்னர் யாழ் நீதிமன்றில் தொடர்வழக்கு விசாரணைக்காக வியாழக்கிழமை (01) ஒன்பதாவது நாளாக எடுத்து கொள்ளப்பட்டது.

சாட்சியினை சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிமன்றாதிபதி நாகரட்ணம் நிசாந்த நெறிப்படுதினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X