2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

'ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்பிக்கப்படும்'

George   / 2017 ஏப்ரல் 19 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஸன்

“இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் படையினருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்திய பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய, வட - கிழக்கு மாகாணங்களில், மக்களின் காணிகளில் அமைந்துள்ள படைமுகாம்களுக்கு காணி உரிமையாளர்களுடன் சென்று பேச்சுவார்த்தை நடத்தி ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்பிக்கப்படும்” என, நாடாளுமன்ற உறுப்பினர் எம்..சுமந்திரன் கூறியுள்ளார்.

வடமாகாண ஆளுநர்  ரெஜினோல்ட் குரேயின் அலுவலகத்தில், புதுவருடத்தை ஒட்டி சிநேகபூர்வ சந்திப்பு ஒன்று செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினரிடம் காணி விடுவிப்பு மற்றும் காணாமலாக்கப்பட்டோரின் விடயம், பட்டதாரிகளின் போராட்டம் குறித்து கேட்டபோது அவர் இதனைக் கூறினார்.

இது தொடர்பில் எம்..சுமந்திரன் மேலும் கூறுகையில், “காணி விடுவிப்பு மற்றும் அதற்காக நடக்கும் போராட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தியுள்ளோம். அதன் தொடர்ச்சியாக, திங்கட்கிழமை (17) பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதிகளை சந்தித்து கலந்துரையாடியிருந்தோம்.

இதனடிப்படையில் படையினர்வசம் உள்ள மக்களுடைய காணிகள் தொடர்பாக அந்தந்த படை முகாம்கள் அமைந்துள்ள பகுதிகளுக்கு சென்று மக்களுடனும் படை அதிகாரிகளுடனும் பேசி ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்பிப்பதென தீர்மானிக்கப்பட்டது.

அதனடிப்படையில், வடக்கு - கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் மேற்கொண்டு நேரடியாக ஆராய்ந்து, உரிய தரப்புக்களுடன் சந்திப்புக்களை நடத்தி இறுதியாக எந்தெந்த காணிகள் என்னென அடிப்படையில் எப்போது விடுவிக்கப்படலாம் என்பது தொடர்பான அறிக்கையினை ஜனாதிபதிக்கு சமர்பிக்க உள்ளோம்.

இதேவேளை, காணாமல்போனவர்கள் தொடர்பான அலுவலகம் சட்டத்தின் முதல் வரைவு,  கடந்த ஓகஸ்ட் மாதம் வந்தது. இந்நிலையில், அந்த சட்டமூலத்தில் ஜே.வி.பி ஒரு திருத்தத்தை கோரியிருந்தது.

இதற்கிடையில் இந்த விடயம் தொடர்பான ஜனாதிபதியை சந்தித்து நாங்கள் கேட்டுள்ளோம். ஜே.வி.பி கோரியுள்ள திருத்தம் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த திருத்தம் நாடாளுமன்றுக்கு வந்து நிறைவேற்றப்பட்டதன் பின்னர், சட்ட மூலம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.  அது தொடர்பாக நாங்கள் அரசாங்கத்துடன் அழுத்தம் திருத்தமாக பேசியுள்ளோம்.

மேலும், வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனம் குறித்து பிரதமருடன் சந்திப்பு ஒன்றை ஒழுங்கமைத்து கொடுத்திருந்தோம். அதில் பட்டதாரிகள் கலந்து கொண்டார்கள். அதனடிப்படையில் அரச திணைக்களங்களில் உள்ள வெற்றிடங்களை அடையாளம் கண்டு அதனடிப்படையில் நியமனங்களை வழங்க பிரதமர் இணங்கியதுடன், 3 வாரங்கள் கால அவகாசத்தை அவர் கேட்டிருந்தார்.

அந்த கால அவகாசம் நிறைவடைந்துள்ள நிலையில், பெறப்பட்ட வெற்றிடங்கள் தொடர்பான தகவல்கள் உரிய தரப்பினருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்ததும் விண்ணப்பங்கள் கோரப்பட்டு நியமனம் வழங்கப்படும்” என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .