2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

'துஷ்பிரயோகங்களை தடுக்க ஒன்றிணைய வேண்டும்'

Gavitha   / 2015 செப்டெம்பர் 30 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன், நவரத்தினம் கபில்நாத்

சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கட்டுப்படுத்த அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் என கரைச்சி பிரதேச செயலர் பொ.நாகேஸ்வரன் தெரிவித்தார்.

தேசிய இளைஞர் மன்றம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, சிறுவர் பெண்கள் செயற்குழு, இலங்கை இளைஞர் கழக சம்மேளனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில், சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிரான நடை பவனி, புதன்கிழமை (30) நடைபெற்றது.

கிளிநொச்சி டிப்போ சந்தியிலிருந்து ஆரம்பமாகிய இந்த நடைபவனி,  கரைச்சி பிரதேச செயலகம் வரையில் இடம்பெற்றது. இந்த நடை பவனியில் கிளிநொச்சி கல்வி வலயத்தைச் சேர்ந்த மாணவர்களும் கலந்துகொண்டனர். நடை பவனியைத் தொடர்ந்து கரைச்சி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில், கரைச்சிப் பிரதேச செயலர் கருத்துக்கூறுகையில் இதனை கூறினார்.

'சிறுவர், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இன்று அதிகரித்துள்ளன. இளைய சமுதாயம் இதனால் பெரும் பாதிப்புக்களை எதிர்கொள்கின்றது. சிறுவர்களின் உடல், உள ரீதியான பாதிப்புக்களில் இருந்து விடுபடுவதற்கும் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கும் அனைவரும் இணைந்து செயற்படுவது அவசியமாகும். துஷ்பிரயோகங்களை தடுப்பதன் மூலம் நல்லதொரு சமுதாயத்தைக் கட்டியெழுப்ப முடியும்' என அவர் மேலும் கூறினார்.

இதேவேளை,  சிறுவர்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில் சிறுவர்களை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கோரி வவுனியாவில் பேரணியொன்று இடம்பெற்றது.

இளைஞர் சேவைகள் மன்றத்தால் வவுனியா பிரதேச செயலகத்துக்கு முன்பாக இருந்து வவுனியா பஸ் தரிப்பிடம் வரை சென்ற இப்பேரணியில், சிறுவர்களை வாழ விடுங்கள், பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க அனைவரும் ஒன்றிணையுங்கள் என்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் மக்கள் பேரணியாக சென்றிருந்தனர்.

வவுனியா பிரதேச செயலாளரினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இப் பேரணியில், இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர்கள், வட மாகாணசபை உறுப்பினர் எம். தியாகராசா, திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தாகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .