2025 ஜூலை 23, புதன்கிழமை

'4 தசாப்பதங்கள் திருத்தாத வீதிகளுக்கு வெறும் 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு'

Niroshini   / 2015 டிசெம்பர் 17 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

வட மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி அமைச்சுக்களின் கீழுள்ள அதிகளவான வீதிகள் கடந்த 40 வருடங்களாக புனரமைக்கப்படாத நிலையில், வடமாகாண சபையின் 2016ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 5 மாவட்டங்களின் உள்ளூராட்சி மன்றங்களுக்கான வீதிகளின் புனரமைப்புக்காக 100 மில்லியன் ரூபாய் நிதி மாத்திரமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் மாத்திரம் உள்ளூராட்சி மன்றங்களின் 627.52 கிலோமீற்றர் நீளமான 841 வீதிகளின் புனரமைப்புக்கு 4683.20 மில்லியன் ரூபாய் தேவை என உத்தேசிக்கப்பட்டிருக்கும் நிலையில் 5 மாவட்டங்களிலும் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் வீதி புனரமைப்புக்கு 100 மில்லியன் ரூபாயே ஒதுக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டுக்கான மாகாண சபையின் வரவு-செலவுத் திட்டம் செவ்வாய்க்கிழமை(15) சபையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று(16) முதலமைச்சர் அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான விவாதம் நடைபெற்றிருந்தது. இதன்போது முதலமைச்சர் அமைச்சின் கீழ்வரும் உள்ளூராட்சிமன்றங்களுக்கான வீதி புனரமைப்புக்கு 100 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த 100 மில்லியன் ரூபாய் நிதியானது, யாழ்ப்பாணத்துக்கு 39 மில்லியன் ரூபாய், கிளிநொச்சிக்கு 19 மில்லியன் ரூபாய், முல்லைத்தீவு மாவட்டதுக்கு 12 மில்லியன் ரூபாய், மன்னார் மாவட்டத்துக்கு 13 மில்லியன் ரூபாய், வவுனியா மாவட்டத்துக்கு 17 மில்லியன் ரூபாய் என ஒதுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் புனரமைக்க வேண்டிய நிலையில் அதிக வீதிகள் உள்ளன.இதனை அந்தந்த மாவட்ட மாகாண சபை உறுப்பினர்கள் புதன்கிழமை (16) கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் நடைபெற்ற வரவு–செலவுத்திட்ட அமர்வில் சுட்டிக்காட்டினர்.ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி யானை பசிக்கு சோளப்பொரி போட்டதைப் போன்றதாகும் எனவும் குறிப்பிட்டிருக்கின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில், மன்னார் காலத்தில் தேர் ஓடியபோது முறையாக இருந்த வீதிகள் அதற்குப் பின்னர் இயன்றளவும் புனரமைப்புச் செய்யப்படவில்லை என  மாகாண சபை உறுப்பினர் க.சிவநேசன் சுட்டிக்காட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .