2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

‘தமிழ் மக்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தோற்றது நல்லாட்சி’

Gavitha   / 2017 மே 01 , பி.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன் 

தமிழ் மக்களுக்கு வழங்குவதாகக் கூறப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில், நல்லாட்சி அரசாங்கம் தோற்றுவிட்டது என்று தெரிவித்த சுகாதார அமைச்சரும் அமைச்சரவையின் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன, வடக்கிலுள்ள மக்களின் உரிமைகளுக்காகப் போராடவுள்ளதாகவும் உறுதியளித்தார்.

ஜனநாயக தேசிய முன்னணி, முற்போக்குத் தமிழ்த் தேசிய முன்னணி ஆகியன இணைந்து, “வடக்கும் தெற்கும் சங்கமிக்கும் மனிதநேய மே தினம்” எனும் தொனிப்பொருளில், உழைப்பாளர் தினம் கொண்டப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்காவில் நேற்று இது இடம்பெற்றது. 

அங்கு உரையாற்றிய அமைச்சர் ராஜித, “ஜாதி, வர்க்க, சமய, இன வித்தியாசங்களுக்கு நான் எதிரானவன். மனிதத்துக்காக நான் தோன்றுகிறேன். போர்க் காலத்திலும் நான் வடக்குக்கு வந்தேன். முந்தைய தேர்தலின் போதும் வந்தேன்” என்று தெரிவித்தார். 

இனவாதத்துக்கு எதிரான போராட்டம், 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி வெல்லப்பட்டது என்று தெரிவித்த அமைச்சர், அதை மாற்றுவதற்கு அனுமதிக்கப்படாது என்று தெரிவித்தார். அத்தோடு, தமிழ் மக்களின் பிரச்சினைகள், இன்னும் தீர்க்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். 

“2015ஆம் ஆண்டுத் தேர்தலுக்கு முன்பாக, காணி, வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கும் காணாமல் போனோரைக் கண்டுபிடிப்பதற்கும் நாம் வாக்குறுதியளித்தோம். எனினும், இவை அனைத்தையும் நடைமுறைப்படுத்துவதில், நல்லாட்சி அரசாங்கம் தோற்றுவிட்டது. இவற்றைத் தீர்ப்பதில், மெதுவான செயற்பாடுகளே காணப்படுகின்றன” என்றார். 

“தமிழ் மக்களுடைய காணிகளில் ஓர் அங்குலமேனும் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. வாக்குறுதிகள் மந்த கதியில் இடம்பெற்றாலும் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். இராணுவம், பொலிஸ் ஆகியவற்றில் இருந்து இறந்தவர்களும் இந்த நாட்டினரே. குறிப்பாக சிங்களப் பிரதேசங்களில் மிகவும் வறுமை நிலையில் இருந்து வந்தவர்களே இறந்தார்கள். அந்தக் கொலை கலாசாரம் இப்போது நிறைவுக்கு வந்திருக்கிறது.  

“அடுத்த தொழிலாளர் தினத்தில், யாழ்ப்பாண மக்களை சந்திக்கும்போது கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டிருக்கும்.   

மேலும், கடந்த 3 வாரங்களுக்கு முன்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்து கலந்துரையாடினேன். 1 மணி நேரம் இந்த சந்திப்பு இடம்பெற்றது. அதன்போது அவர்கள் தங்கள் பிள்ளைகள், கணவன், சகோதர ர்கள் போன்றவர்கள் எங்கே? அவர்களுக்கு என்ன நடந்தது? என்பதையே கேட்கிறார்கள். அதில் அரசியல் இலாபம் தேடும் அவசியம் எனக்கு கிடையாது. இந்நிலையில் அவர்களுடைய தகவல்களை கேட்டேன். மாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் பெரிய புத்தகம் ஒன்றை கொடுத்திருக்கின்றார்.  

அதேபோல், வடக்கில் போர் காரணமாக அங்கவீனமாக்கப்பட்ட பலர் வாழ்வதற்கு போராடிக்கொண்டு இருக்கின்றார்கள். அவர்கள் தொடர்பான விபரங்களையும் மாகாண சுகாதார அமைச்சரிடம் கேட்டிருக்கிறேன். அவர்களுக்கும் உதவிகள் வழங்கப்படும். மேலும் பல ஆயிரக்கணக்கான மக்கள் புனர்வாழ்வு முகாம்களிலும், உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு வீடுகள் வழங்கப்படும். அதில் பல சிக்கல்கள் இருந்தாலும் அது நிறைவேற்றப்படும்.  

மேலும் இலங்கையின் பெரிய வைத்தியசாலை மேல் மாகாணத்தில் உள்ளது. அதேபோல் வடமாகாணத்திலும் வைத்தியசாலைகள் மேம்படுத்தப்படும். இதேபோல் மேல்மாகாணத்துக்கு அடுத்தபடியாக வடமாகாணத்துக்கு அதிகளவு நிதியை நான் வழங்கியிருக்கிறேன். சுமார் 1,600 கோடி ரூபாய் நிதியை வடமாகாணத்தின் அபிவிருத்திக்கு வழங்கியுள்ளேன். அதேபோல், யாழ்.போதனா வைத்தியசாலையை உலக தரம்வாய்ந்த வைத்தியசாலையாக தரம் உயர்த்துவேன்” என, அவர் மேலும் கூறினார்.    

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X