2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

மணிமண்டபங்கள் இளையோரின் சமய, சமூக வளர்ச்சிக்காக செயற்படவேண்டும்

Niroshini   / 2016 ஜூன் 06 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு காலத்தில் மடங்கள் அமைக்கும் எழுச்சி எம்மண்ணில் காணப்பட்டது. இம்மடங்களின் வாயிலாக அறிவுப் பசியும் வயிற்றுப் பசியும் தீர்க்கப்பட்டது. அன்று மடங்கள் ஆற்றிய முன்னெடுப்பை இன்றைய மண்டபங்கள் மேற்கொள்ள வேண்டும் என கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதிஅதிபர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் தெரிவித்தார்.

உரும்பிராயில் புதிதாக அமைக்கப்பட்ட கற்பகவிநாயகர் மணிமண்டபத்தின் திறப்பு விழா வங்கியாளர் சி.நந்தகுமார் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (05) இடம்பெற்றது, அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கூறுகையில்,

“மடங்களின் பெயரைத் தாங்கி ஊர்கள் பெயர் பெற்றன. கந்தர்மடம், சுப்பர்மடம், பூநாறிமடம், ஆறுகால்மடம், மருதனார்மடம் என்று யாழ்ப்பாணத்தில் மடத்துடன் அமைந்த பெயர்கள் ஏராளம் காணப்படுகின்றன. இன்று மண்டபம் அமைக்கும் கலாசாரம் எம்மிடையே தொற்றிக் கொண்டுள்ளது. அன்று மடங்கள் ஆற்றிய முன்னெடுப்பை இன்றைய மண்டபங்கள் மேற்கொள்ள வேண்டும்.

சமூக இயங்கு நிலையில் ஏற்பட்ட மாற்றம் மண்டப அமைப்புக்கு வழிகோலியது. ஆலயங்களில் சமபந்திப் போசனம், பொது இடங்களில் திருமணம் என ஏற்பட்ட மனப்பாங்கு மாற்றம் மணி மண்டப அமைப்புக்கு வித்திட்டிருக்கின்றது. உரும்பிராயில் தற்போது பல மண்டபங்கள் உருவாகியிருக்கின்றன. இவை அன்னதானம் வழங்குதல், திருமண நிகழ்வுகளை நடத்துதல் என தமது பணிகளை வரையறுக்காது, இளைய தலைமுறையினரின் சமய, சமூக வளர்ச்சிக்கான மையங்களாகவும் செயற்பட வேண்டும். 

கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலம் பேசக்கூடிய சைவப் பெண்களை உரும்பிராயில் காண முடிந்தது. மலாயாவுக்குச் சென்று உழைத்ததுடன், தமது கிராமத்தையும் நாகரிக வலுவுள்ள நகராக உயர்த்திய பெருமை உரும்பிராய் மக்களைச் சாரும். 

அதன் தொடர்ச்சியாக இன்று புலம்பெயர்ந்து வெளிநாட்டில் வசிக்கும் உரும்பிராய் பிரதேசத்தவர்கள் தமது ஊர் பற்றிய சிந்தனையுடன், வாழ்வதுடன் யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்ற பல்வேறு அறப்பணிகளுக்கும் தமது பங்களிப்புக்களை வழங்கி வருகின்றனர். மணிமண்டபங்கள் அடையாத நெடுங்கதவுகளைக் கொண்டு திகழ வேண்டும். சமூகத்தின் உயர்ச்சிக்குப் பங்களிப்புக்களை வழங்க வேண்டும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X