2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வடக்கில் வீடமைப்பு திட்டங்களை முன்னெடுப்பதில் அரசசார்பற்ற நிறுவனங்கள் சிரமம்

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 02 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

மீள் குடியேற்றம் தொடர்பான வீடமைப்பு வேலைகளை மேற்கொள்வதற்கு அரசசார்பற்ற நிறுவனங்கள் தேவையான நேரத்தில் கட்டிட வேலைக்கான மணலைப் பெறுவதில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அவற்றை சீர்செய்து நிர்ணயிக்கப்பட்ட விலையில் சகலரும் மணல் பெறுவதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளும்படி யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையம் அரசாங்க அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி
வைத்துள்ளது.

யாழ். மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் தலைவர் வி. கேசவன் ஒப்பமிட்டு யாழ் அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமாரிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

"மீள் குடியேற்றம் தொடர்பான வீடமைப்பு வேலைகளை மேற்கொள்வதற்கு எமது அரச சார்பற்ற நிறுவனங்கள் தேவையான நேரத்தில் கட்டட வேலைக்கான மணலைப் பெறுவதில் பாரிய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதை தங்களது கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம்.

மணல் விநியோகத்திற்கு பொறுப்பான நிறுவனத்திடம் உரிய கட்டணம் செலுத்திய பின்பு நீண்டகாலம் விநியோகத்திற்காக காத்திருக்க வேண்டிய நிலையுள்ளது. இப்படியாக மணல் பெறுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றமையால் எமது அங்கத்துவ
நிறுவனங்கள் தாம் மேற்கொள்ளும் குடிசைகள் மற்றும் வீடமைப்புத் திட்டங்களை ஒப்புக்கொள்ளப்பட்ட நேரத்திற்குள் பூர்த்தி செய்ய முடியாது சிரமத்திற்குள்ளாகின்றனர்.

இதனால் வேலைகளைப் பூர்த்தி செய்யும் முகமாக வெளிச்சந்தையில் மிகவும் அதிகரித்த விலையில் மணல் கொள்வனவு செய்யவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாவதுடன் அதிகரித்த செலவீனத்தால் ஏற்படும் தாக்கத்தையும் தாங்கவேண்டியுள்ளனர்.

ஜனாதிபதி செயலணியால் அனுமதி வழங்கப்பட்ட அனைத்துத் திட்டங்களையும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னதாக எவ்வித தடங்கலுமின்றி முடிக்கும்படி பணித்துள்ளதும் தாங்கள் அறிந்ததே. இதே நிலையே சாதாரண பொதுமக்களுக்கும் ஏற்படுகிறது.
பொதுமக்களைப் பொறுத்த வரையில் முற்பணம் செலுத்திய பின்னரும் மணல் பெறுவதற்காக பல மாதங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.

இந்த விடயத்தில் தாங்கள் உடனடியாகத் தலையிட்டு மணல் விநியோக நடைமுறையை சீர் செய்து நிர்ணயிக்கப்பட்ட விலையில்
சகலரும் மணல் பெறுவதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளும்படி வேண்டிக்கொள்கின்றோம்" என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X