2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வலிகாமத்தில் அதிகரிக்கும் கொள்ளைச் சம்பவங்களால் பீதியில் உறையும் மக்கள்

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 23 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மாவட்ட வலிகாமம் பகுதியில் மானிப்பாய், சுன்னாகம் பொலிஸ் பிரிவுகளில் துப்பாக்கி, கத்தி, வாள் போன்ற ஆயுதங்களை இரவு, பகல் என்று பாராமல் பல இடங்களில் குற்றச் சம்பவங்கள் இடம்பெறுகின்றமையால் அப்பகுதி மக்கள் இரவில் நிம்மதியாகத் தூங்க முடியாமலும் பகலில் பெண்கள் தயக்கமின்றி நடமாட முடியாமலும் திண்டாடுகின்றனர்.

இரு மாதங்களுக்குள் ஏழு இடங்களில் இடம்பெற்ற வழிப்பறி கொள்ளைச் சம்பவங்கள் மக்கள் மத்தியில் ஒரு வித பீதியை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த மாதம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிலுள்ள உடுவில் தெற்கு, மடத்தடி என்னும் இடத்தில் பதிவுத் திருமணம் இடம்பெற்ற வீட்டிற்குள் இரவு நேரம் புகுந்த கொள்ளையர் கத்தி, வாள் போன்ற கூரிய ஆயுதங்களைக் காட்டிப் பயமுறுத்தி பதிவுத் திருமணம் செய்த இளம் பெண் உட்பட அங்கிருந்த ஏனைய பெண்களும் அணித்திருந்த சுமார் 25 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றிருந்தனர்.

அன்றைய தினம் மானிப்பாய், ஆனந்தன் வீதியிலுள்ள வீட்டிற்கு இரவு நேரம் சென்ற கொள்ளையர் கைத்துப்பாக்கியைக் காட்டிப் பயமுறுத்தி ஆறு பவுண் எடையுள்ள தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இதேபோல் சங்குவேலியிலுள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டிற்கு இரவு நேரம் சென்ற கொள்ளையர் ஆயுதங்களைக் காட்டிப் பயமுறுத்தி ஆசிரியரும் அவரின் தாயாரும் அணிந்திருந்த 10 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளார்கள்.

பட்டப்பகலில் சண்டிலிப்பாய்ப் பகுதியில், வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடிய கொள்ளையர், அப்பகுதி இளைஞர்களினால் துரத்திப் பிடிக்கப்பட்டுப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் சுதுமலையிலுள்ள மாப்பியன் வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணின் தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அபகரித்துச் சென்றுள்ளனர்.

கடந்த வாரம் சங்கானையிலுள்ள அந்தணர் ஒருவரின் வீட்டிற்குச் சென்ற கொள்ளையர்கள் அங்கிருந்தவர்களைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் ஏறித் தப்பிச் சென்றுள்ளனர்.

இரு தினங்களுக்கு முன் சங்கானைப் பகுதியில் ஒரு வீட்டிற்குச் சென்ற கொள்ளையர், அங்கிருந்தவர்களைத் துப்பாக்கி முனையில் பயமுறுத்திப் 15 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இவ்வாறு வலிகாமம் பகுதியில் தொடர்ந்து இடம்பெற்று வரும் கொள்ளை, வழிப்பறிச் சம்பவங்களால்  மக்கள் நிம்மதி இழந்து வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X