2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

யாழ். மாநகரசபை வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வும் ஒளிவிழாவும்

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 28 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மாநகரசபையின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வும், ஒளிவிழாவும் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் மாநகரசபை  மேயர் யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் நடைபெற்றது.

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, சர்வமத தலைவர்கள், மாநகர ஆணையாளர் சரவணபவ, மாநகரசபை எதிர்கட்சித் தலைவர் றெமிடியஸ் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

யாழ். மாநகரசபை முதல்வராக பதவியேற்று ஒருவருட காலம் பூர்த்தியடையவுள்ள நிலையில்,; யாழ் நகர வீதிகளில் 2,000 வீதி விளக்குகள் யாழ். மாநகர சபையால் பொருத்தப்பட்டிருப்பதுடன், வீதி புனரமைப்புக்காக 10 மில்லியன் ரூபாவும் வடிகாலமைப்புக்காக 3 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டிருப்பதாக  மாநகரசபை மேயர் யோகேஸ்வரி பற்குணராசா இங்கு உரையாற்றும்போது கூறினார்.

நன்கொடை, வரிகள் மூலம் மட்டுமன்றி, அமைச்சர் டக்ளல் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி போன்றவர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட நிதியுதவிகளையும் கொண்டே இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.

2010 நவம்பர் மாதம் வரையில் 440 மில்லியன் ரூபாவாக மாநகரசபை வருமானம் கணக்கிடப்பட்டுள்ளதாகவும், அடுத்த வருடம் இது மேலும் அதிகரிக்கப்படுமெனவும் தெரிவித்த அவர், முக்கியமாக வீதி புனரமைப்புப் பணிகள் நடைபெறுமென்றும் உறுதியளித்தார்.

நல்லூர் உற்சவ காலத்தில் மாநகரசபையின் செயற்பாடுகள் அனைவராலும் பாராட்டப்பட்டதாகத் தெரிவித்த அவர், இதற்காக உழைத்த ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

யாழ். பொதுநூலகத்தில் உள்ளக வசதிகள் பல செய்யப்பட்டுள்ளதாகவும் சிறுவர் பகுதியின் தொழில்நுட்ப வசதிகளை மேற்கொள்வதற்காக 6 உத்தியோகஸ்தர்கள் விரைவில் சிங்கப்பூர் செல்லவிருப்பதாகவும் யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார்.  மேலும், குடிநீர் பொறியியலாளர்கள் இருவர் புதுடில்லி செல்லவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X