2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

யாழ். மாநகரசபையின் எதிர்கட்சிக்குள் குழப்பம்

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 30 , பி.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

யாழ். மாநகரசபையின் எதிர்கட்சி உறுப்பினர்களுக்கிடையே கருத்து முரண்பாடுகள் அதிகரித்துக் காணப்படுகின்றன.

யாழ். மாநகரசபையின் ஒளிவிழா நிகழ்வு அண்மையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டபோது எதிர்கட்சி உறுப்பினர்கள் ஒருமித்து பல காரணங்களை முன்வைத்து ஒளிவிழா நிகழ்வை பகிஸ்கரிப்பதாக ஊடகங்களுக்கு அறிவித்திருந்தனர்.

எனினும் மாநகரசபையின் எதிர்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கிடையே ஒற்றுமையின்மை காரணமாக கூட்டமைப்பின் மு.றெமீடியஸ் தமது கட்சியின் தீர்மானத்திற்கு மாறாக ஒளிவிழாவில் கலந்து கொண்டமை தொடர்பில் எதிர்கட்சி மாநகரசபை உறுப்பினர்கள் றெமீடியஸ் வெளியிட்ட கருத்தினை மறுத்துள்ளதுடன் அவரைக் கண்டித்தும் மாநகரசபை முதல்வருக்கும் மற்றும் ஊடகங்களுக்கும் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.

அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது... யாழ். மாநகரசபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த 8 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றார்கள். நாம் எதிரணியைச் சேர்ந்திருந்து எமது கடமைகளைச் செய்து வருகின்றோம். மாநகரசபைக் கட்டளைச் சட்டங்களின்படி எதிர்க்கட்சித் தலைவர் என எவரையும் நியமிக்க முடியாது. அதற்கென சட்ட ஏற்பாடேதும் இதுவரையில்லை. நாங்களும் எவரையும் எதிர்கட்சித் தலைவராக நியமிக்கவில்லை. மாநகரசபை உறுப்பினரான மு.றெமீடியஸ் எதிர்க்கட்சித் தலைவர் எனத் தம்மைக் கருதி செயற்படுவது விதிகளை மீறிக செயற்பாடாகும். அத்துடன் அவரது செயற்பாடுகளும் கருத்துக்களும் பெரும்பான்மையான எமது கருத்துக்களுக்கும் கட்சியின் கொள்கைகளுக்கும் விரோதமாக இருப்பதாக நாம் கருதுகின்றோம்.

கடந்த 27ஆம் திகதி மாநகரசபையின் ஒன்றுகூடல் விழாவில் நாம் விழாவைப் புறக்கணிப்பதாக பெரும்பான்மையான எமது உறுப்பினர்கள் தீர்மானித்ததற்கு மாறாக எதிர்க்கட்சித் தலைவர் என்ற கோதாவில் உரையாற்றி எம்மை அவமதித்துள்ளார். ஆகவே எமக்காகப் பேசும் தார்மீக உரிமையை அவர் இழந்துவிட்டார். எமது அணியின் கூட்டுப் பொறுப்பை மீறிய அவரது கருத்தை ஒட்டுமொத்தக் கருத்தாக எடுத்துக் கொள்ளக்
கூடாதென தங்களையும் சபையின் மற்றைய உறுப்பினர்களையும், சபை உத்தியோகத்தர்களையும் விநயமாகக் கோட்டுக் கொள்கிறோம் என அவ்வறிக்கை வெளியிடப்பட்டது.

இவ்வறிக்கையில் யாழ். மாநகரசபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்களான திருமதி அ.மேரியம்மா, கா.ந.விந்தன் கனகரத்தினம், ந.இராஜதேவன், பெ.ஜேக்கப், அ.பரஞ்சோதி, அ.கொர்னேலியஸ் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X