2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஊடகங்கள் மக்களுக்கு உண்மைகளைச் சொல்ல வேண்டும்: வரதராஜப்பெருமாள்

A.P.Mathan   / 2011 ஜனவரி 01 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹேமந்த்)

ஊடகங்கள் மக்களுக்கு உண்மைகளைச் சொல்ல வேண்டும். யுத்தகாலத்தில் உண்மைகளை எடுத்துரைக்க முடியாத நிலை இருந்தது. ஆனால் இப்பொழுது அந்தநிலை மாறிவிட்டது. இந்தப் புதிய சமாதானச் சூழலிலும் ஊடகங்கள் உண்மைகளைச் சொல்லத் தயங்கினால் முடிவில்லாத துயரத்தையே மக்கள் சந்திக்க வேண்டியதாக இருக்கும். வராலாற்றின் படிப்பினைகளை மக்களும் ஊடகங்களும் பாடமாக எடுத்துக் கொள்ளத்தவறினால் மீண்டும் தண்டனைக் காலத்தையே நாம் சந்திக்க வேண்டியிருக்கும் என வடக்குக் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தெரிவித்துள்ளார்.

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று காலை நடைபெற்ற டான் - தமிழ் ஒளி தொலைக்காட்சியின் பத்தாவது ஆண்டு நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு 'தமிழ் மக்களின் அரசியலும் ஊடகங்களும்' என்ற பொருளில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றின் வெற்றி தோல்விகளில் ஊடகங்களின் பங்களிப்பும் பொறுப்பும் உண்டு. இவற்றைச் சரியாக மதிப்பிட்டு புதிய மாற்றங்களைச் செய்வதற்கு ஊடகங்கள் முன்வருவது அவசியம். தமிழ் மக்களின் ஊடகப்பரப்பு இன்று உலகம் முழுவதும் வியாபித்துள்ள அளவுக்கு அது பலமாக இல்லை. இதற்குக் காரணம் இந்த ஊடகங்கள் உண்மை, யதார்த்தம், புதிய சிந்தனை போன்ற தளங்களில் செயற்படாமையே என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸில் ஆரம்பிக்கப்பட்ட டான் தொலைக்காட்சி, யாழ்ப்பாணத்தில் முதற்தடவையாக தனது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. இந்த நிகழ்வுக்கு டான் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளர் சர்த்தார் தலைமை வகித்தார். தொலைக்காட்சியின் உரிமையாளரும் ஸ்தாபகருமான குகநாதன் சிறப்புரையாற்றினார். ரங்கன் தேவராஜன் 'ஊடகங்களும் தமிழர் அரசியலும்' என்ற பொருளில் உரையாற்றினார்.

மேலும் இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜபெருமாள், சட்டத்தரணி ரங்கன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் சீ.வி.கே.சிவஞானம் உட்பட சமயப் பெரியார்கள் கிராம அலுவலர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X