2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சுன்னாகம், மருதனார்மடம் சந்தை அபிவிருத்தி கலந்துரையாடல்

Menaka Mookandi   / 2011 ஜனவரி 11 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யாழ் மாவட்டத்துக்குட்பட்ட சுன்னாகம் மற்றும் மருதனார்மடம் ஆகிய சந்தைகளை அபிவிருத்திக்கு உற்படுத்துவதற்கான கலந்துரையாடலொன்று நேற்று திங்கட்கிழமை பிற்பகல் சுன்னாகம் பொதுநூலக மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ஈ.பி.டி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார், 'நாளாந்தம் இச்சந்தைகளுக்கான தனித்தனி அபிவிருத்தி குழுக்களை உருவாக்கி அதன் மூலம் அவர்களின் ஆலோசனைகள் கருத்துக்கள் பெறப்பட்டு சந்தைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக' கூறினார்.

அத்துடன், 'இச்சந்தைகளுக்கான அபிவிருத்திக் குழுக்களானது விவசாய சம்மேளன பிரதிநிதிகள், வர்த்தகச் சங்க பிரதிநிதிகள், பிரதேச சபை உறுப்பினர்கள், நலன் விரும்பிகள் என்போர் உள்ளடங்கலாக சந்தை அபிவிருத்திக் குழு உருவாக்கப்படும் எனவும் இதன் மூலம் காலப்போக்கில் இச்சந்தைகளின் அபிவிருத்தி செயற்பாடுகள் இவ்வபிவிருத்திக் குழுவின் சிபாரிசின் மூலம் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன், இவ்வருடமும் சந்தைகளின் ஆரம்ப கட்ட அபிவிருத்தி வேலைகளுக்கு என மருதனார்மடம் சந்தை 8 மில்லியன் ரூபாவிலும் சுன்னாகம் சந்தை 5 மில்லியன் ரூபாவிலும் புனரமைக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் இச்சந்தைகளில் விவசாயிகளிடம் இருந்து பொருட்கள் கொள்வனவு செய்யப்படும் போது வியாபாரிகளால் பெறப்பட்டு வந்த 10 வீதக் கழிவு தொடர்பில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

அதாவது, கிழங்கு பொருட்களுக்கு குறிப்பாக மரவள்ளி, கருணைக்கிழங்கு போன்றவற்று மட்டுமே 10 வீதக் கழிவு அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் ஏனைய பொருட்களுக்கு இந்த கழிவு வீதம் அனுமதிக்கக் கூடாது என்றும் இது தொடர்பில் விவசாய சம்மேளனம் அறிக்கை ஒன்றை தயாரித்து வெளியிட வேண்டும் என்பதோடு பிரதேச சபை இது தொடர்பான அறிவித்தல் விளம்பரம் ஒன்றை சந்தையில் காட்சிக்கு வைக்க வேண்டும்.

இந்த நடைமுறையினை ஏற்றுக்கொள்ளாத அல்லது பின்பற்றாத வியாபாரிகளின் சந்தை, வியாபார உரிமம் இரத்துச் செய்ய வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.  அத்தோடு விவசாயிகளுக்கு சம்மேளனத்தின் ஊடாக வழங்கப்படுகின்ற சலுகைகள் இரத்து செய்ய வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. இதனை பிரதேச சபை கண்காணிக்க வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டன. இத்தீர்மானங்கள் அனைத்தும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கும் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X