2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

பாதுகாப்பினை கருத்திற்கொண்டே யாழில் பதிவு நடவடிக்கை: யாழ். அரச அதிபர்

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 08 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படுகின்ற பதிவு நடவடிக்கைகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை கருத்திற்கொண்டே மேற்கொள்ளப்படுகின்றன என்று யாழ். மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் குடியிருப்பாளர்கள் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்படுவதாகவும் புகைப்படங்கள் எடுக்கப்படுவதாகவும் வெளிவந்த செய்திகள் தொடர்பாக யாழ். மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமாரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்:

'யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றபோது அரச அதிபர் என்றரீதியில் என்னிடம் கேட்கவேண்டிய அவசியம் படையினருக்கு கிடையாது. அது பாதுகாப்பு அமைச்சினூடாகவே மேற்கொள்ளப்படுகின்ற விடயம். அந்தவகையில்தான் யாழ்ப்பாணத்தில் பதிவுகள் மேற்கொள்வது தொடர்பாகவும் எனக்கு உத்தியோகபூர்வமான அறிவித்தல் கிடைக்கவில்லை. இருந்தபோதிலும் யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வருகின்ற குற்றச்செயல்களை தடுப்பதற்காகவே இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதைமட்டும் என்னால் உறுதிப்பட கூறமுடியும். இந்நடவடிக்கையையிட்டு பொதுமக்கள் கவலை கொள்ளத் தேவையில்லை' என்று குறிப்பிட்டார்.

இப்பதிவுகள் சம்பந்தமாக யாழ். மாவட்ட இராணுவ தலைமையகத்தினை தொடர்புகொண்டு கேட்டபொழுது...

'யாழில் தற்சமயம் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதையிட்டு எமக்கு பல்வேறு தரப்பினரும் முறைப்பாடு செய்திருந்தனர். வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்களாலேயே மேற்படி குற்றச்செயல்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தனர். ஆகையினால், வெளிமாவட்டங்களிலிருந்து யார்யாரெல்லாம் யாழில் தங்கியிருக்கிறார்கள் என்பதை அறிவதற்கே இந்த பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம். இது குற்றச்செயல்கள் மேலும் அதிகரிக்காமல் தடுக்கும் ஒரு நடவடிக்கையே ஒழிய மக்களை துன்பத்துக்குள்ளாக்கும் நோக்கம் எதுவும் எமக்கும் கிடையாது.

தற்சமயம் இரவுவேளைகளில் அதிகளவிலாக படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். அவர்களை மீறி எந்தவிதமான தீய செயலும் யாழில் நடைபெறாது. அமைதியாக இருக்கின்ற யாழில் இதுபோன்ற சேறுபூசும் தீய செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவதே எங்களுடைய தலையாய கடமையாகும்' எனவும் யாழ். மாவட்ட தலைமையக தொடர்பாளர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X