2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

தமிழ் மக்களின் நலனுக்காக எம்மீது அவதூறுகளை பொழிவோரையும் ஐக்கியத்துக்காக அரவணைப்போம்:டக்ளஸ்

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 13 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

'எமது மக்களின் அனைத்து உரிமைகளுக்காகவும் நடைமுறைச்சாத்தியமான வழிமுறையில் தொடர்ந்தும் உழைத்து வருகின்ற எம்மீது திட்டமிட்ட வகையிலான அவதூறுகளை யார்தான் பொழிந்தாலும், தமிழ் மக்களின் பொதுவான நலன் கருதி எம்மீது அவதூறு பொழிவோரையும் ஐக்கியத்திற்காக அரவணைத்தே செல்வோம்' என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

'தமிழ் மக்களின் அரசியலுரிமைக்காக அர்ப்பணங்களையும், தியாகங்களையும் சுமந்து நடந்து வந்த நாம் எமது இலக்கினை அடைவதற்கான பாதையில் இருக்கும் தடைக்கற்கள் எவைகள் என்பதையும் சரிவரப்புரிந்து கொண்டிருப்பவர்கள்.

ஆகவே தான் கடந்து போன காலங்களில் எமது இலக்கை அடைவதில் தோற்றுப்போன வழிமுறைகள் யாவற்றையும் அரசியல் துணிச்சலோடு நிராகரித்திருந்ததோடு, நடைமுறைச் சாத்தியமான வழிமுறையினையும் எமது மக்களிடையே அறிமுகப்படுத்தி அதற்கான நியாயத்தன்மைகளையும் எடுத்து விளக்கி வருகின்றோம். எமது இலக்கினை விரைவாக எட்ட முடிந்த எமது அரசியல் நிலைப்பாடுதான் எம்மை ஏனைய பல அரசியல் தலைமைகளில் இருந்து வேறுபடுத்தி வைத்திருக்கின்றது.

இதனால் எம்மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் எம்மீது கால காலமாக அவதூறுகளை பொழிந்து வருகின்றனர். ஆயினும், கருத்துக்களை கருத்துக்களால் மட்டும் எதிர் கொள்வோம் என்ற ஜனநாயகக்கோட்பாட்டின் நம்பிக்கையோடு, எமது கருத்துக்களும் நியாயங்களுமே வெல்லப்பட்டு வருகின்றன என்ற உறுதியோடு எமது மக்களுக்காக எம்மீது பொழியப்படும் அவதூறுகளை நாம் தாங்கி நடந்து வருகின்றோம்.

தமிழ் அரசியல் கட்சிகள் யாவும் எமது மக்களின் அரசியல் தீர்வு குறித்து ஒருமித்து முடிவெடுக்கவும், ஒன்று கூடிப்பேசவும் முடிந்த ஐக்கியத்திற்கான தளமாக தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தை உருவாக்குவதில் முன்னின்று உழைத்திருந்ததோடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் பேசுவதற்காக பாதை ஒன்றையும் திறந்து அவர்களோடும் எமது மக்களின் அரசியல் தீர்வு குறித்து நாம் பேசி வருகின்றோம்.  

இந்நிலையில், தமிழ் மக்களின் அரசியல் உரிமை குறித்த பொதுவான நிலைபாட்டினை தொடர்ந்தும் எம்மோடு கைகுலுக்கிப் பேச வேண்டியவர்கள் எம்மீதான அவதூறுகளை பொழிவதற்கு மீண்டும் தயாராகிவிட்டனர் என்பதை சில ஊடகங்கள் வாயிலாக நாம் காண முடிகின்றது. இது எமக்கு வருத்தங்களை தருவனவாக இருப்பினும், வலிகளை தந்துவிடவில்லை.

எமது மக்கள் இதுவரை பட்ட வதைகள், வலிகளோடு ஒப்பிடுகையில் சக தமிழ்த் தலைமைகள் எம்மீது பொழியும் அவதூறுகள் எமக்கு ஒரு பொருட்டு அல்ல. கடந்த காலங்களில் நாம் கடந்து வந்தவைகள் பெரும் புயலும், காட்டுத்தீயும். அதனோடு ஒப்பிடுகையில் காழ்ப்புணர்ச்சியில் எம்மீது பொழியப்படும் தூற்றல்கள் எவையும் எமக்கு சிறு தூறல்களே எமது மக்களுக்காக இவைகளையும் நாம் தாங்கி நடக்க தயாராக இருக்கின்றோம்.

ஆயினும், தமிழ்க் கட்சிகளுக்கிடையில் ஒன்று கூடி பேசும் தமிழ் அரங்கத்தின் கூட்டுச்செயற்பாடுகளோ அன்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கலந்து பேசுவதற்கான வழிமுறைகளோ எக்காரணம் கொண்டும் தடைப்பட்டுப் போவதற்கான பாதகமான சூழ்நிலை என்பது உருவாகி விடக்கூடாது என்பதில் நாம் உறுதியாகவே இருக்கின்றோம்.

இதேவேளை கடந்த கால எமது உழைப்பினாலும் சக கட்சிகளின் ஒத்துழைப்பினாலும் கட்டி எழுப்பப்பட்டிருக்கும் அனைத்துக் கட்சிகளும் ஒன்று கூடி பேசுவதற்கான தளத்தை வெறும் தேர்தல் பிரச்சாரங்களுக்காக உடைத்து சிதைத்து விடக்கூடாது என்பதில் சகல தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டும் என்பது எமது மக்களின் விருப்பங்களாகும்.

எம்மீது அவதூறு பொழிவோரையும் தமிழ் மக்களின் நலன்களுக்காக அரவணைத்து செல்லவேண்டிய பொறுப்புணர்ச்சியை நாம் உணர்ந்து கொள்கின்றோம் என்றும், தமிழ் மக்களின் அரசியலுரிமைக்காக அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒருமித்து பேசும் தளத்தை பாதுகாப்பதற்கான பொறுப்புணர்ச்சியை மட்டுமன்றி அதற்கான சகிப்புத் தன்மையினையும் வரலாறு எமக்கு அனுபவங்களாக வழங்கியிருக்கின்றது' என்று அவர் மேலும் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X