Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Suganthini Ratnam / 2011 மே 18 , மு.ப. 07:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
'உலக வரலாற்றில் தாட்சணியத்திற்கும் நீதியைப் பெறுதற்கும் சட்டமுறையான பாதுகாப்பைப் பெறுவதற்கும் கைவிலங்குகளின்றிச் சுதந்திரத்துடன் நடமாடுவதற்கும் பாக்கியம் கிட்டாமை எமக்கொரு துரதிர்ஷ்டமே' என யாழ். பல்கலைக்கழக அனைத்துப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மாணவர் ஒன்றியம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
முள்ளிவாய்க்காலில் வரையப்பட்ட வடுக்களுடனும் ஆறாத மனக்காயங்களுடனும் உள்ளெழும் அழுகுரலையும் தாங்கிக்கொண்டு, உள்ளூரத் தெரியும் ஏதோவொரு நம்பிக்கையை மனதில் எண்ணியவாறு, ஆயுத மோதலின்போது எங்களை விட்டுப் பிரிந்த எமது சக பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள், எங்கள் உடன் சகோதரர்கள் ஒவ்வொருவரையும் மனதில் எண்ணி அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்று பிரார்த்தித்து நிற்கின்றோம்.
ஆயுதமோதலும் அதனோடு இணைந்த எண்ணற்ற மரணங்களும் நடந்து முடிந்து. இரண்டு வருடங்கள் நிறைவடைகின்றன. இருப்பினும் நினைத்துப் பார்க்க முடியாத அந்த இறுதி நாட்களும் நேரங்களும் இப்பொழுதும் மனதில் ஊசலாடுகின்றன. எப்பொழுதும் ஊசலாடும் வன்னி அவலங்கள் நிறைவடைந்து இரண்டு வருடங்கள் நிறைவுபெற்றாலும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை இன்னமும் முன்னேற்றமின்றியும் மீள்நிர்மாணம் செய்யப்படாமையும் உள்ளமை வருத்தத்தை அளிக்கின்றது.
கல்வியினை அபிவிருத்தி செய்வதே தமிழினத்தின் உறுதியான ஏமாற்றப்பட முடியாத எதிர்காலத்திற்கு உத்தரவாதம் என்பதால் தமிழினத்தின் கல்வி அபிவிருத்தி குறித்து அனைத்து சமூகத்தினருடனும் அக்கறையுடன் செயற்பட வேண்டுமென்றும் இதற்காக அனைவரும் ஒன்றிணைந்த ஒரு செயற்றிட்டத்தினை தயாரிப்பதில் கவனம் செலுத்த வேண்டுமென்றும் அழைப்பு விடுக்கின்றோம்.
தமிழர் பிரதேசங்களில் யுத்தத்தின் வடுக்களாக எஞ்சியுள்ள தாய், தந்தையரை இழந்தோர், விழிப்புலனற்றோர், அங்க அவயவங்களை இழந்தோர், கணவனையோ மனைவியையோ இழந்த குடும்பஸ்தர்கள், பிள்ளைகளை இழந்து தனித்து வாடும் பெற்றோர்கள், முதியோர்கள், உடல் செயல்த்திறனற்றுப்போய் இருக்கும் சகோதரர்கள் தொடர்பாகவும் அத்துடன் யுத்தத்தினால் இழந்து போயிருக்கும் கல்வி, வேலை வாய்ப்புக்கள், கடின உழைப்பினால் சம்பாதித்துக் கொண்ட சொத்துக்கள், வாழ்வாதார மூலதனங்கள், இயற்கை வளங்கள் என்பவற்றின் எதிர்காலம் குறித்த மிகப் பெரிய கேள்வியும் சவாலும் எங்கள் முன்னால் விடப்பட்டிருக்கின்றதை ஞாபகப்படுத்துகின்றோம்.
இவற்றின் மீது கவனம்; செலுத்தி, தேவையான ஆய்வினை மேற்கொண்டு, பொருத்தமான செயற்றிட்டங்களைத் தயாரித்து, மீளவும் நம்பிக்கையையும் நல்வாழ்வையும் உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென்று அழைத்து நிற்கின்றோம். இதற்கு பல்கலைக்கழக மாணவர் சமூகத்தின் சார்பில் எங்களின் காத்திரமான பங்கு எப்பொழுதும் இருக்கும் என்பதையும் உறுதி பூணுகின்றோம். அரசியல் நிலைப்பாடு தொடர்பில் நாம் எப்பொழுதும் வரலாற்றின்பால் கட்டுப்பட்டவர்களாகவே நடந்துகொள்ள விரும்புகின்றோம். தற்போதைய சூழலில் தமிழினத்தின் அரசியல்த் தீர்வு மற்றும் உரிமைகள் தொடர்பாக பேச்சுக்கள் நடத்தப்பட்டு வரும் சூழல் காணப்படுகின்றது. எது எவ்வாறிருப்பினும் அரசியல் தீர்வு விடயங்களில் கவனம் செலுத்துகின்ற அரசுடன் பேச்சு நடத்துகின்ற தலைவர்கள் மக்களால் தமக்கு வழங்கப்பட்ட ஆணையின்படி தாங்கள் நடப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
அத்துடன், எந்தவொரு அரசியல் தீர்வு தொடர்பாகவும் இறுதித்தீர்வு எட்டப்படுவதற்கு முன்னர் தமிழினத்தின் அனைத்துத் தரப்பினருடனும் திறந்த நிலையிலான கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றோம். அரசியற் தீர்வு என்பது இரகசியமானதொன்றாக மேற்கொள்ளப்படுவது ஆகாது என்பதையும் வலியுறுத்த விரும்புகிறோம். சமூகத்தின் மீதான அக்கறை, எதிர்காலம் குறித்தான சிந்தனையில் பல்கலைக்கழக மாணவர் சமூகத்தினராகிய நாமும் எப்பொழுதும் தெளிவாகவும் பொறுப்புடனும் செயற்படும் என்பதை இந்நாளில் தெரிவித்துக்கொள்கிறோம். எங்களுக்கும் சமூகத்திற்குமிடையிலான தொடர் பாடலையும் ஆக்கபூர்வமான உறவினையும் சேதப்படுத்துவதில் பல்கலைக்கழகத்திற்குள்ளும் வெளியிலும் திட்டமிட்டுச் சில சக்திகள் செயற்படுகின்றபோதும் இவைகளைக் குறித்து எச்சரிக்கையுடனும் அவதானத்துடன் செயற்பட்டு, சரியான பாதையில் பயணிப்பதை நாம் உறுதி செய்கின்றோம். இறுதியாக நாம் ஒன்றுபட்டுச் சிந்திப்பதும் செயலாற்றுவதுமே எமக்குப் பலமும் இன்றியமையாத அவசியமாகவும் உள்ளன.
எனவே, தமிழினத்தின் அனைத்துச் சமூகங்களையும் ஒன்றிணைத்த வகையில் சமூக விருத்திக்கானதும் அரசியல் உரிமைக்கானதுமான ஒன்றிணைந்த செயற்பாட்டை முன்னெடுக்க அனைவரும் முன்வர வேண்டுமென்று கேட்டுக்கொள்வதுடன், அத்தகைய முயற்சிகளுக்குப் பல்கலைக்கழக மாணவர் சமூகத்தின் ஆதரவு எப்பொழுதும் இருக்கும் என்றும் உறுதியெடுத்துக் கொள்கின்றோம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .