2025 மே 17, சனிக்கிழமை

யாழ். சமூகத்தை மீளக்கட்டியெழுப்ப வேண்டிய தேவை எழுந்துள்ளது: ரஜீவ விஜயசிங்க

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 22 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். சமூகத்தை மீளக்கட்டியெழுப்ப வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி செயலணியின் புனரமைப்பு பொறுப்பதிகாரியுமான ரஜீவ விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தில் தோன்றியுள்ள சமூகப் பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பவென்பது தொடர்பில் ஆராயும் கூட்டம் யாழ். நூலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,  

'யுத்தத்திற்கு பின்னர் சமூகப் பிரச்சினைகள் நிறைந்தவையாக யாழ். சமூகத்தின் தற்கால நிலைமை காணப்படுகின்றன. கடந்தகால யுத்தத்திலிருந்து விடுபட்டு நாம் அபிவிருத்தியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றோம். இந்த நிலையில் அபிவிருத்தியென்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் சமூகப் பிரச்சினைகள் தலையெடுக்க ஆரம்பித்திருக்கின்றன.  இப்பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய பொறுப்புடையவர்களாக நாம் உள்ளோம்.

போதைப்பொருள் பாவனை, பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், கொலைகள், கொள்ளைகளென யாழ்ப்பாணத்தில் அதிகரித்துச் செல்லும் சமூகப் பிரச்சினைகளைத் தடுப்பதற்கான  உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

யாழ். கல்வி சமூகத்தினர் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இவர்களின் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு  கல்வி அமைச்சினூடாக நடவடிக்கை எடுக்கப்படும்.

பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக எனக்கு தெரியவந்தது. ஏன் இந்த நிலைமை. இதற்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

வறுமை, பொருளாதாரமின்மை, வேலைவாய்ப்பின்மை, சுயதொழில் முயற்சியின்மையென்று நாம் சொல்லிக் கொண்டேயிருப்போமானால் இது தொடர்ந்து கொண்டேயிருக்கும். ஆக்கபூர்வமாக சிந்தித்து அவற்றை இல்லாதொழிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்' என்றார்.

இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, யாழ். மாவட்ட செயலாளர் இமெல்டா சுகுமார், யாழ். மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் நெவில் பத்மதேவா, வடமாகாண ஆளுநரின் செயலளர் வி.விஜயலட்சுமி, திணைக்களத் தலைவர்கள், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .