2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

யாழ். மாநகரசபை கூட்டத்தில் கைகலப்பு: ஆளும்கட்சி உறுப்பினர்கள் வெளியேற்றம்

Kogilavani   / 2011 டிசெம்பர் 30 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மாநகர சபையின் மாதாந்த கூட்டத்தொடர் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிலையில் ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் கைலப்பு இடம்பெற்றுள்ளது. ஆளும்கட்சி உறுப்பினர்களான மங்கள நேசன், நிஷாந்தன், விஜயகாந் ஆகியோரே  மோதலில் ஈடுப்பட்டுள்ளனர். இதையடுத்து விசேட பொலிஸ் உத்தரவிற்கமைய மேற்படி உறுப்பினர்கள் அவ்விடத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்.மாநகர சபையின் 2011 ஆண்டுக்கான இறுதிக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் நடைபெற்றது. சபை ஆரம்பித்தவுடன் முதல்வரின் விசேட அனுமதி பெற்ற ஆளும் தரப்பு உறுப்பினர் விஜயக்காந், 'சிறைகளில் வாடுவோரின் விரைவான விடுதலையும் காணாமல் போனோர் தொடர்பான விசாரணையும்' என்ற தலைப்பிலான பிரேரணை முன்வைத்து உரை நிகழ்த்தினர்.

இந்த உரையைச் செவிமடுத்த உறுப்பினர்கள், இந்த உரை இனரீதியான பாகுபாட்டையும் புலிகளை குற்றஞ்சாட்டுவதாகவும் அமைந்துள்ளது என்று கூறினர். அத்துடன், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இந்தப் பிரேரணையை எவரும் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர் மு.றெமிடியஸ் வாதிட்டார்.

எதிர்கட்சி உறுப்பினர் சங்கையா, இது தமிழ் இனத்துக்கு செய்யும் துரோகம் எனக் குறிப்பிட்டதுடன் அப்பாவிப் பொதுமக்கள் மீது இராணுவத் தலையீடுகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் இந்தப் பிரேரணையில் திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டார்

ஆளும் தரப்பு உறுப்பினர் நிஷாந்தன், 'இது ஜனநாயகப் பண்புகள் இல்லாம் ஈ.பி.டி.பி.யின் அறிக்கை மாதிரி இருக்கிறது' எனக் கூறி இந்த பிரேரணையை சபையில் கிளித்து எறிந்தார். இந்தச் செயற்பாட்டை அடுத்து சபை 30 நிமிடங்கள் அல்லோலகல்லோலப்பட்டது. புலிகள் கௌரமானவர்கள் அவர்களைக் குற்றம் சொல்வதற்கு இங்கு நாம் யாரையும் விடமாட்டோம் என சபையில் எதிரணி உறுப்பினர் விந்தன் தெரிவித்தார்.

இதில் தலையிட்ட மாநாகர முதல்வர் ஜனநாயகப் பண்புகயோடு நடந்து கொள்ளும் படியும் இனரீதயான பிரச்சினைகளை சபைக்கு கொண்டு வரவேண்டாம் எனவும் இனத்துவேசத்துடன் பேசவேண்டாம் என சபை உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து ஆளும் கட்சி உறுப்பினர் நிஷாந்தன் 'இந்த சபையில் உண்மையில் யார் முதல்வர்? யோகேஸ்வரியா, விஜயக்காந்தா? என கேள்வி எழுப்பியவுடன் சபையில் அமர்ந்திருந்நத விஜயக்காந் ஆளும் உறுப்பினர் நிஷந்தனைத் தாக்கத் தொடங்கியதுடன் ஆளும் தரப்பிற்கிடையில் மோதல் வெடித்தது.

இதனையடுத்து முதல்வரின் உத்தரவுக்கு அமைய பாதுகாப்பு உத்தியோகத்தர்களினால் மோதலில் ஈடுபட்ட ஆளும் தரப்பு உறுப்பினர்கள் சபையை விட்டு வெளியேற்றப்பட்டனர். அத்தோடு யாழ்ப்பாண பொலிஸார் யாழ்.மாநகர சபைக்கு முதல்வரினால் வரவழைக்கப்பட்டு யாழ்.மாநகர சபையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொண்டதை அடுத்து யாழ்.மாநகர சபையில் பொலிஸார் குவிக்கப்பட்டு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0

  • suthan Saturday, 31 December 2011 12:33 PM

    கடவுளே போலீஸ்காரர் பாவம் நம்ம அரசியல்வாதிகளுக்கிடையில் மாட்டி படுகிற பாட்டை பார்த்திங்களா ......வடிவேலு சொன்னமாதிரி .... பாவம் அவங்களே confuse ஆகிட்டாங்களோ.

    Reply : 0       0

    zaki Monday, 02 January 2012 02:00 PM

    அரசியல் மேடையில் ரவ்டித்தனம் இதுதான் இன்றைய அரசியல் கலாச்சாரம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X