2025 மே 17, சனிக்கிழமை

ஆங்கில மருந்துப் பாவனையை மேற்கொண்ட சுதேச மருத்துவ நிலையங்கள் கண்டுபிடிப்பு

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 17 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். குடாநாட்டில் தொடர்ச்சியாக ஆங்கில மருந்துப் பாவனையை மேற்கொண்டுவந்த தனியார் சுதேச மருத்துவ நிலையமொன்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மூடப்பட்டுள்ளது.

அத்துடன்,  5 சுதேச மருத்துவ நிலையங்களில் ஆங்கில மருந்துப் பாவனை கண்டுபிடிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டதுடன்,  அவர்களை எச்சரிக்கை செய்து சுதேச மருத்துவ முறையைப் பின்பற்றுமாறும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொதுமக்களால் தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து பிராந்திய சுகாதாரப் பணிமனையின் உத்தியோகத்தர் குழு யாழ். குடாநாட்டிலுள்ள தனியார் சுதேச மருத்துவ நிலையங்களில் திடீர் பரிசோதனையை மேற்கொண்டது. இதன்போதே ஆங்கில மருந்துப் பாவனையை மேற்கொண்ட சுதேச மருத்துவ நிலையங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

சுதேச மருத்துவ நிலையங்களில் மேற்கொள்ளப்படும் ஆங்கில மருந்துப் பாவனை தொடர்பில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்கு தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைத்தவண்ணமுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

சுதேச மருத்துவ நிலையங்களில் மேற்கொள்ளப்படும் ஆங்கில மருந்துப் பாவனையால்  மக்களின் உயிருக்கு குறிப்பாக சிறுவர்கள் மற்றும்  குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலைமையுள்ளது. ஆங்கில மருந்துப் பாவனையை மேற்கொள்ளும்  சுதேச மருத்துவர்கள் இதனை உடனடியாக நிறுத்துமாறும் தொடர்ந்தும் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும்  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
 
சுதேச மருத்துவர்கள் யாராவது ஆங்கில மருந்துப் பாவனையில் ஈடுபடுவதை அறிந்தால் உடனடியாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை, 572/3, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம் என்ற முகவரிக்கு அறியத்தருமாறும் பொதுமக்களிடம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .