2025 மே 17, சனிக்கிழமை

யாழில் மலேரியாவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 17 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

இந்தியாவிலிருந்து மீளத் திரும்பியோர் மற்றும் இந்தியாவுக்கு சென்று வருபவர்கள், வெளிநாடு செல்வதற்காக முகவர்களூடாக ஆபிரிக்க நாடுகளுக்கு சென்று திரும்பியவர்கள், ஆபிரிக்கா போன்ற மலேரியா நோயுள்ள நாடுகளில் வேலை செய்து விடுமுறையில் வருபவர்கள் போன்றோரில் தற்போது மலேரியா, மூளை மலேரியா போன்ற நோய்களின் தாக்கம் இனங்காணப்படுவது அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் மீண்டும் மலேரியா பரவாதவாறு கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத் திணைக்களம் மக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றது. இதற்காக பின்வரும் விடயங்களில் அவதானம் செலுத்துமாறு சுகாதாரத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்தியாவிலிருந்து மீளத் திரும்பியோர் மலேரியாவுக்கான இரத்தப் பரிசோதனையை அருகிலுள்ள அரச வைத்தியசாலையில் செய்து மலேரியா கிருமித்தொற்று இல்லையென்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.

இந்தியா அல்லது மலேரியா நோய் காணப்படும் ஏனைய நாடுகளுக்கு சென்று வரவுள்ளவர்கள் மற்றும் மலேரியா நோய் காணப்படும் இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கு சென்றுவருவோர் மலேரியா நோய் ஏற்படாது பாதுகாப்பதற்கான முற்காப்பு சிகிச்சையை உங்களுக்கு அருகிலுள்ள அரச வைத்தியசாலை அல்லது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் பெற்றுக்கொள்ளுங்கள்.

வெளிநாடு செல்வதற்காக ஆபிரிக்க நாடுகளுக்கு சென்று திரும்பியவர்கள் மலேரியாவுக்கான இரத்தப் பரிசோதனையை அருகிலுள்ள அரச வைத்தியசாலையில் செய்து மலேரியா கிருமித்தொற்று இல்லையென்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள்.

மலேரியா நோயுள்ள நாடுகள் அல்லது இலங்கையில் மலேரியா நோயுள்ள பகுதிகளுக்கு மலேரியா நோய்க்கான முற்காப்பு சிகிச்சை பெறாது சென்று வந்தவர்களுக்கு நடுக்கத்துடன் காய்ச்சல் ஏற்பட்டால் மலேரியாவுக்கான இரத்தப் பரிசோதனையை அருகிலுள்ள அரச வைத்தியசாலையில் செய்துகொள்ளுங்கள்.

மலேரியா காய்ச்சல் உயிர் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதென்பதுடன்,  கடந்த மூன்றாண்டுகளாக யாழ். மாவட்டத்தில் உள்ளூர் மலேரியாத்தொற்றுகள் இனங்காணப்படவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .