2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழ். மேதின கூட்டத்தில் தமிழ் மக்கள் அணிதிரள வேண்டும்: மனோ அழைப்பு

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 28 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசின் மேலாதிக்கத்திற்கு எதிரான ஜனநாயக போராட்டங்கள் தமிழ் மாகாணங்களில் வெகுவிரைவில் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அத்தகைய ஜனநாயக அரசியல் போராட்டங்களுக்கு பிள்ளையார் சுழி போடுவதாக எமது பொது எதிர்கட்சிகளின் மேதின கூட்டம் யாழ்ப்பாணத்தில் அமைய வேண்டும். என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது,

எதிர்க்கட்சிகளின் பொது மேதின கூட்டம் யாழ்நகரில் நடத்தப்படுவது தொடர்பில் தமிழ் தேசியவாத நண்பர்கள் சில விமர்சனங்களை முன்வைத்துள்ளார்கள். இந்த நடவடிக்கை தமிழ் தேசியத்தை சிங்கள பெரும்பான்மை கட்சிகளின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரும் செயல் என்றும், ஐக்கிய தேசிய கட்சிக்கு யாழ்ப்பாணத்தை  திறந்து விடும் நடவடிக்கை என்றும் எம்மீதும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

விமர்சனங்களை முன் வைக்கும்  தமிழ் தேசியவாத நண்பர்களை நான் மிகவும் மதிக்கின்றேன். அவர்கள் இதை நல்ல எண்ணத்திலேயே முன்வைக்கிறார்கள் என்பதை நான் நன்கு அறிவேன்.

ஆனால் ஐதேக யாழ்ப்பாணத்தில் ஒரு கூட்டத்தில், கலந்துகொள்வதன் மூலம் யாழ் மக்கள் ஐ.தே.க.விற்கு கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு வழங்க ஆரம்பித்து விடுவார்கள் என்று நான் நம்பவில்லை. ஐதேகவிற்கு கடந்த காலங்களில் கண்ணை மூடிக்கொண்டு வழங்கிய ஆதரவை தமிழ் மக்கள் இன்று கொழும்பிலேயே வழங்கவில்லை.

தமிழ் தேசியவாத அணியினரின் ஆதரவுடனும், முற்போக்கு சிந்தனை கொண்ட சிங்கள அணியினரின் துணையுடனும் அதை நாம் கடைசியாக கொழும்பு மாவட்டத்தில் நடந்த தேர்தலில் நிரூபித்து காட்டியுள்ளோம்.

இன்று கொழும்பு மாநகர சபையை எமது ஜனநாயக மக்கள் முன்னணியின் ஆதரவு மூலமாகவே ஐ.தே.க கொண்டு நடத்தும் சூழலை தமிழ் மக்கள் ஏற்படுத்தியுள்ளார்கள்.

எனவே கொழும்பிலேயே நிலைமை இவ்விதம் இருக்கையில், யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் ஒரு மேதின கூட்டத்தை கண்டு ஐதேகவுக்கு ஆதரவு வழங்க  ஆரம்பித்து விடுவார்கள் என்பது ஏற்றுகொள்ள முடியாத கருத்து ஆகும்.

விமர்சனங்களை முன்வைக்கும் தமிழ் தேசியவாத அணியினரை மதிப்பதுபோல், நான் யாழ்ப்பாணத்து தமிழர்களையும் மதிக்கின்றேன். வடமாகாண மக்கள் ஒருபோது தமிழ் தேசியத்திற்கு வெளியில் செல்ல மாட்டார்கள் என்பது எனது நம்பிக்கை. 

யாழ்ப்பாணத்தில் நடக்க உள்ள மேதின கூட்டம்,  ஐக்கிய தேசிய கட்சி கூட்டம் அல்ல. ஐதேகவுடன் மாத்திரம் இணைந்து மேதின கூட்டம் நடத்தும் தேவை எமக்கு கிடையாது.

இது ஜனநாயக மக்கள் முன்னணி, நவ சமசமாஜ கட்சி, ஐக்கிய சமவுடைமை கட்சி ஆகிய கட்சிகளுடன், வடக்கின் தலைமை கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பும் பங்குபற்றும் பொது எதிரணி நிகழ்வாகும்.

தென்னிலங்கையில் நாம் நடத்திய பொது எதிர்க்கட்சி போராட்டங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்பி கலந்துகொண்டார். இத்தகைய ஒரு பொது எதிர்க்கட்சி நிகழ்வையே நாம் தற்சமயம் வடக்கிற்கும் விரிவுபடுத்த விளைகிறோம்.

மே முதலாம் திகதி காலை 10 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட கூட்டமைப்பு கிளையினரால், கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் நடத்தப்படும் மேதின கூட்டத்திலும், பின்னர் நல்லூர் கோயில் வீதி, கைலாசபதி பிள்ளையார் கோவிலடியில் பிற்பகல் 1.30 மணிக்கு ஊர்வலமாக ஆரம்பித்து யாழ் புனித ரோச் விளையாட்டரங்கில் நடைபெற உள்ள பிரதான பொது எதிரணி மேதின கூட்டத்திலும் நான் கலந்துகொள்ள உள்ளேன். இந்த இரண்டு கூட்டங்களிலும் தமிழ் மக்கள் அணி திரண்டு கலந்து கொள்ள வேண்டும் என வேண்டுகிறேன்.'

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .