Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2012 மே 01 , மு.ப. 08:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
(யாழ்ப்பாணத்திலிருந்து றிப்தி அலி, கவிசுகி)
யாழ்ப்பாணத்தில் பொதுமக்களின் காணிகளிலுள்ள இராணுவத்தினர் வெளியேற வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவிடம், நல்லை ஆதின குருமுதல்வர் வேண்டுகோள் விடுத்தார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள கூட்டு எதிர்க்கட்சிகளின் மே தினத்தில் கலந்துகொள்வதற்காக இங்கு வந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவுக்கும் நல்லை ஆதின குருமுதல்வருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. இதன்போதே நல்லை ஆதின குருமுதல்வர் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரிடம், இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.
இச்சந்திப்பில் நல்லை ஆதின முதல்வர் மேலும் தெரிவிக்கையில்,
'யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் பொதுமக்களின் காணிகளில் தொடர்ந்து தங்கியுள்ள இராணுவத்தினரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஐக்கிய தேசியக் கட்சியினர் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை அடிக்கடி மேற்கொண்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளை கேட்டறிய வேண்டுமென அவர்கள் விரும்புகின்றனர். இந்நிலையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முன்வர வேண்டும். சண்டையில்லாத நாடு எமக்கு அவசியமாகும்.
யாழ்ப்பாணத்தில் இளைஞர்களுக்கு வேலையில்லாப் பிரச்சினை பாரிய பிரச்சினையாக உள்ளது. வேலையில்லாப் பிரச்சினையை தீர்த்துவைப்பதற்காக இங்கு மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீண்டும் திறப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
இதற்குப் பதிலளித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க,
'அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பல மாதங்களாக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளபோதிலும், இதுவரையில் தீர்வு கிடைக்கவில்லை. கடந்த தடவை நான் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தபோது அன்று மக்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளையே இன்றும் எதிர்நோக்குவதைக் காண்கின்றேன்.
எமது நாட்டுப் பிரச்சினை ஜெனீவாவரை இன்று சென்றுள்ளது. தமிழ்க் கட்சிகளைப் போன்று நவ சிஹல உருமய உள்ளிட்ட ஏனைய கட்சிகளும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமென தெரிவிக்கின்றனர். இதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஐக்கிய தேசியக் கட்சியும் தயாராகவுள்ளது. ஆனால் அரசாங்கமே இதில் முக்கியத்துவம் செலுத்த வேண்டும். உங்களின் வேண்டுகோளை ஏற்று ஐக்கிய தேசியக் கட்சியின் தூதுக்குழுவினர் அடிக்கடி யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொள்வர்' என்றார்.
இச்சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர், திஸ்ஸ அத்தநாயக்க, தேசிய அமைப்பாளர் தயா கமகே, நாடாளுமன்ற உறுப்பினர்களான காமினி ஜயவிக்ரம பெரேரா, விஜயகலா மகேஸ்வரன், கயந்த கருணாதிலக, அனோமா கமகே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
யாழ்ப்பாணத்தில் கூட்டு எதிர்க்கட்சிகளின் மே தினத்தில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோர் நல்லூர் முருகன் கோவிலில் இன்று செவ்வாய்க்கிழமை காலை விசேட பூஜை வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .