2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

மாற்றுத்திறனாளிகளுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்கான வசதிகளை அரச அலுவலகங்களில் ஏற்படுத்துமாறு பணிப்ப

Kogilavani   / 2012 செப்டெம்பர் 20 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)

'மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் அரச அலுவலகங்களுக்குச் சென்று தங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் அவர்களுக்கான வசதிவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். அத்திட்டத்தை அமுல்படுத்தவற்கு தேவையான அனைத்து வசதிகளும் சமூகசேவை அமைச்சினால் மேற்கொள்ளப்படும்' என சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சின் செயலாளர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டச் செயலகத்தில் இன்று வியாழக்கிமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்களின் மேம்பாடு தொடர்பாக முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

'மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் அரச அலுவலகங்களில் தங்களின் தேவைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நேரடியாகச் சென்று செய்யக்கூடிய நிலையை உருவாக்கவேண்டும். அந்த வேலையை கட்டாயமாக்குமாறு எமக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் அனைத்து பிரதேச செயலகங்கள், மாநகர மற்றும் நகரசபை, பிரதேச சபை ஆகியற்றில் அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அந்த திட்டத்தை மேற்கொள்வதற்கான அனைத்து வசதிகளையும் சமூக சேவை அமைச்சு மேற்கொள்ளும்.

முதியோருக்கான ஓய்வுதியக் கொடுப்பனவிற்காக மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ்  2 லட்சத்து 29 ஆயிரம் பேர் நாடுபூராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இத்திட்டத்திற்கு 70 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் உள்வாங்கப்பட்டுள்ளனர். கடந்த ஆவணி மாதம் தொடக்கம் இந்த கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகிறது' என அவர் தெரிவித்தார்.

'அத்துடன் மாற்றுத்திறனாளிகளுக்கான தேவைகளை சரியாக புரிந்து கொண்டு சமூக சேவை உத்தியோகஸ்தர்கள் அர்பணிப்புடன் செயற்படவேண்டும். அவ்வாறு அர்ப்பணிப்புடன் செயற்படுகின்ற உத்தியோகஸ்தர்களுக்கு ஜப்பானில் அடுத்த வருடம் பயிற்சி வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது' என  அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இக்கலந்துரையாடலின்போது, யாழ். மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் தாங்களும் ஒரு அங்கத்தவர்கள் என்பதை உணரக்கூடிய வகையில் அவர்களுக்கான தொழில் பயிற்சிகள், வாழ்வாதார உதவிகள் என்பவற்றின் மூலம் அவர்கைள எவ்வாறு நெறிப்படுத்தவது என்பது தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது.

யாழ். மாவட்டத்தில் 7820 மாற்றுத்திறனாளிகள் இருப்பதாவும் அவர்களில்; 4517 ஆண்கள் மற்றும் 3303 பெண்களும் அடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டது.

இவர்களில் 59 பேர் வீட்டுத்திட்டம் பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளதாகவும் இவர்களில் 45 பேருக்கான முதற்கட்ட நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன் சமூக சேவை அமைச்சினால் யாழ்.மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்காக மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.

யாழ். அரச அதிபர் சுந்தரம் அருமைநாயம் தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில்;   சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறைத் அமைச்சின் செயலாளர் திருமதி இமெல்டா சுகுமார், சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறைத் அமைச்சின் மேலதிக செயலாளர் கிறிஸ்ரி, யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மேலதிக அரச அதிபர் ரூபினி வரதலிங்கம், பிரதேச செயலாளர்கள் மற்றும் சமூகசேவை உத்தியோகஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X