2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

வட மாகாண எதிர்க்கட்சி தலைவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Super User   / 2013 டிசெம்பர் 17 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


சுமித்தி தங்கராசா


வட மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் க.கமலேந்திரன் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் 31ஆம் திகதி விளக்கமறியிலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷியனின் கொலை விவகாரம் தொடர்பிலேயே அந்த மூவரும் கைது செய்யப்பட்டு இன்று 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த மூவரையும் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்திய போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார். வடமாகாண எதிர்க்கட்சித்தலைவர் கமலேந்திரன் சார்பாக சட்டத்தரணி முடியப்பு றெமிடியாஸ் ஆஜராகியிருந்தார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பெற்றுக்கொள்ளப்பட்ட கமலேந்திரனின் வாக்குமூலம் சிங்களத்தில் எடுக்கப்பட்டு அதில் கமலேந்திரனின் ஒப்பம் வைக்கப்பட்டுள்ளதாகவும், வாக்கு மூலத்தினை தமிழில் மொழிப்பெயர்த்து தருமாறும்  வடமாகாண சபை அமர்வுகளில் கலந்துகொள்வதற்காக கமலேந்திரனுக்கு பிணை வழங்குமாறும்; சட்டத்தரணி முடியப்பு றெமிடியாஸ் நீதிமன்றத்தில்  கோரிநின்றார்.

கமலேந்திரனுக்கு எதிராக வலுவான சாட்சிகள் இருப்பதினால் அவரை பிணையில் விடுதலை செய்ய முடியாது என தெரிவித்த நீதவான், வாக்கு மூலத்தினைத் தமிழில் மொழிப்பெயர்க்குமாறும் உத்தரவிட்டார்.

அத்துடன், றெக்ஷியனின் மனைவி சார்பில் சட்டத்தரணி ஸ்ரீகாந்தா நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

தனது தரப்பை சேர்ந்தவரான  றெக்ஷியனின் மனைவிக்கு தனது பிள்ளைகள் சந்திப்பதற்கு அனுமதியளிக்குமாறு நீதிமன்றத்தில் அவர் அனுமதி கோரிநின்றார். அதற்கு  அனுமதி வழங்கிய நீதவான், சந்தேகநபர்களான கமலேந்திரன், றெக்ஷியனின் மனைவி உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .