2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

யாழ். மாவட்ட இளைஞர், யுவதிகள் கவனயீர்ப்பு போராட்டம்

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 23 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-உசாந்தன் நாதன்


யாழ். மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற யாழ். மாவட்டக் காரியாலயத்திற்கு முன்பாக இளைஞர், யுவதிகள் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை இன்று (23) முன்னெடுத்துள்ளனர்.

இளைஞர்கள் மீதான படுகொலைகள், பாலியல் வன்முறைகள், போதைப்பொருள் பாவனை, இலஞ்ச ஊழல் மற்றும்; அண்மையில் திருடர்களின் தாக்குதலில் மரணமடைந்த யாழ். இந்துக் கல்லூரியின் மாணவன் யதுஷனின் கொலை தொடர்பாக நீதியான விசாரணை நடத்தக் கோரியுமே இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதில் 'இளைஞர்களே எதிர்காலத் தூண்கள்;. அவர்களை அழிக்காதீர்கள்', 'வன்முறைகளூடாக இளைஞர்களின் எதிர்காலத்தை நசுக்காதே', 'வருங்கால விருட்சங்களை கருக்காதே' போன்ற சுலோகங்களைத் தாங்கியவாறு கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்படி விடயங்கள் சம்பந்தமாக பேரணியொன்று நடத்தப்படவிருந்தாலும் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற தலைமைக் காரியாலயம் மற்றும் பாதுகாப்புத்தரப்பினரின் அனுமதியின்மை காரணமாகவே கவனயீர்ப்புப் போராட்டமாக நடத்தப்பட்டதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

தொடர்ச்சியாக இது சம்பந்தமான மகஜர்கள்; இளைஞர் விவகார திறன்கள் அபிவிருத்தி அமைச்சரூடாக ஜனாதிபதிக்கும், வடமாகாண சபை முதலமைச்சர், வடமாகாண இளைஞர் விவகார அமைச்சர், இளைஞர்கள் தொடர்பான அதிகாரிகள் ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தனர். 

இப்போராட்டத்தில் மாவட்ட இளைஞர் கழக சம்மேளன நிர்வாக சபை உறுப்பினர்கள், பிரதேச இளைஞர் கழக சம்மேளனங்களின் பிரதிநிதிகள், தேசிய சம்மேளனப் பிரதிநிதிகள், இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .