-சுமித்தி தங்கராசா, நா.நவரத்தினராசா
யாழ். பொலிஸ் நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (27) நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.பி. விமலசேகர, யாழ். மாவட்டத்தில் கடந்த வாரத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் பற்றி தெரிவித்திருந்தார்.
யாழில் 9 இலட்சத்து 24 ஆயிரத்து 250 ரூபா காசோலை மோசடிகள்
யாழ்.பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில் கடந்த வாரங்களில் 9 இலட்சத்து 24 ஆயிரத்து 250 ரூபா காசோலை மோசடிகள் சம்பந்தமாக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேனா தெரிவித்தார்.
யாழ். குருநகர் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு வியாபார நடவடிக்கைக்காக 4 இலட்சம் ரூபா பெறுமதியான காசோலையினை வழங்கி ஏமாற்றியதாக கடந்த 19ஆம் திகதி முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
யாழ். காங்கேசன்துறை வீதியை சேர்ந்த ஒருவர் 2 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலையினை வழங்கி ஏமாற்றியதாக வண்ணார் பண்னையை சேர்ந்த ஒருவர் கடந்த 21ஆம் திகதி முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரவெட்டியை சேர்ந்த ஒருவருக்கு 2 இலட்சத்து 39 ஆயிரத்து 250 ரூபா பெறுமதியான காசோலையினை வழங்கி ஏமாற்றியதாக கடந்த 24ஆம் திகதி முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த காசோலை மோசடிகள் சம்பந்தமான சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ளதால் புலன் விசாரணைகள் மேற்கொள்வதாகவும் இது சம்பந்தமாக யாழ். நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
15 வயதுச் சிறுமி துஷ்பிரயோகம்
உரும்பிராய் செல்வாபுரம் பகுதியிலுள்ள 15 வயது சிறுமி ஒருத்தியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடந்த 24ஆம் திகதி முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சிறுமியை அதே இடத்தை சேர்ந்த ஒருவரே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
இது சம்பந்தமாக யாழ். நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதால் இது தொடர்பாக புலன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
யாழில் சிறுகுற்றம் புரிந்த 157 பேர் கைது
யாழில் சிறு குற்றங்கள் புரிந்த 157 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.பி. விமலசேகர நேற்று வெள்ளிக்கிழமை (27) தெரிவித்தார்.
யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.
யாழ். மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் நிலையங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள குற்றச் செயல்களின் பிரகாரம்,
யாழில் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் 16 பேரும், அடித்து காயம் ஏற்படுத்தியவர்கள் 35பேரும், சந்தேகத்திற்கிடமாக முறையில் நடமாடியவர்கள் 11 பேரும், மதுபோதையில் வாகனம் செலுத்தியவர்கள் 12பேரும், வீதி விபத்திற்கு காரணமானவர்கள் 03 பேரும், பொது இடத்தில் மது அருந்தியவர்கள் 03பேரும், கலகம் விளைவித்தவர்கள் 02பேரும், திருட்டு மின்சாரம் பெற்றவர்கள் 07 பேரும், சிறுகாயங்கள் ஏற்படுத்தியவர்கள் 03பேரும், வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தவர் 04பேரும், இடையூறு விளைவித்த குற்றசாட்டில் ஒருவரும் மிருகவதை செய்த குற்றச்சாட்டில் 05பேரும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரும் பாலியல் குற்றசாட்டில் ஒருவரும் பொருட்கள் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் 03பேரும், நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் 03பேரும், களவு குற்றச்சாட்டில் 03பேரும், குடிவரவு சட்டத்தினை மீறியவர்கள் 02பேரும், ஏனைய குற்றங்களுக்காக 42 பேருமாக மொத்தம் 157 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.