2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

யாழ். மக்களை பிரிய மனமில்லை: ஹத்துருசிங்க

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 09 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

யாழ்ப்பாணத்திலிருந்து இடமாற்றமாகிச் செல்வது கவலை அளிப்பதுடன், இங்குள்ள மக்களை விட்டுப் பிரிவதற்கு தனக்கு மனம் இல்லையெனவும் யாழ். மாவட்ட  கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.

 கொழும்பு இராணுவத் தலைமையகத்தின் நிர்வாக அதிகாரியாக நாளை வெள்ளிக்கிழமை இவர் பதவியேற்கவுள்ளார்.

எழுதுமட்டுவாள் பகுதியில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற 52ஆவது படைப்பிரிவின் தலைமையகத் திறப்பு விழாவின்போது, ஊடகவியலாளர்களுடனான  கலந்துரையாடலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் இங்கு மேலும் தெரிவிக்கையில், 

'யாழ். மாவட்டத்தில்  கடந்த 04 வருடங்களாக  கடமையாற்றி வருகின்றேன். இந்தக் காலப்பகுதியில் இங்கு வாழ்கின்ற மக்களுக்கு பல சேவைகளைச் செய்துள்ளோம். இதனால், யாழ்ப்பாண மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் மிக நெருக்கமான உறவு கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

மேலும், இந்தக் காலத்தில் பல்வேறு தேவைகளுடனும் எதிர்பார்ப்புக்களுடனும் இங்குள்ள மக்கள் இருந்தனர். இதற்கமைய, மக்களுடன் மக்களாக இருந்து பல்வேறு உதவிகளை அவர்களுக்கு வழங்கியிருக்கின்றோம். அதாவது, மாணவர்களின் கல்வி முதல் மக்களுடைய வீட்டுத் திட்டங்கள் என பல உதவிகளைச் செய்துள்ளோம்.

யாழ்ப்பாணத்தில் கடமையாற்றியது மிக்க சந்தோசத்தை ஏற்படுத்துகின்றது. ஆயினும், தற்போது இடமாற்றம் பெற்றுச்செல்வது மிக்க கவலையையும் தருகின்றது. யாழ்ப்பாணம் ஒரு சிறந்த மாவட்டம். இங்குள்ள மக்கள் சிறந்தவர்கள்' என்றார்.

மஹிந்த ஹத்துருசிங்க இடமாற்றம் பெற்றுச் செல்வதைத்  தொடர்ந்து, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியாக கிளிநொச்சி மாவட்ட கட்டளைத் தளபதியாக இதுவரை காலமும் இருந்த மேஜர் ஜெனரல் உதய பெரேரா இன்று வியாழக்கிழமை பதவியேற்கிறார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .