2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

பருத்தித்துறை வியாபாரிகள் கடையடைப்புப் போராட்டம்

Kogilavani   / 2014 ஜனவரி 24 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


யாழ். பருத்தித்துறை புதிய சந்தை கட்டிடத்தின் மேற்தளத்தில் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகள் தங்களை கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் வியாபாரம் செய்வதற்கு அனுமதி வழங்கும்படி கோரி வியாழக்கிழமை (23) வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடாமல் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடக்கின் துரித மீட்சித் திட்டத்தின் கீழ் 150 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட பருத்தித்துறையின் புதிய சந்தைக் கட்டிடத் தொகுதி கடந்த டிசெம்பர் மாதம் 13 ஆம் திகதி வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனினால் திறந்து வைக்கப்பட்டது.

தொடர்ந்து பருத்தித்துறை நகர சபை, பழைய சந்தைக் கட்டிடத்திலிருந்த மரக்கறி வியாபாரிகளை கடந்த 15 ஆம் திகதி முதல் புதிய கட்டிடத்தின் முதலாவது தளத்திற்கு மாற்றியது.

வியாபாரத்தில் ஈடுபடுபவர்களில் பலர் பெண்கள் என்பதினால் முதலாம் தளத்திற்கு மரக்கறிகளை கொண்டு செல்வது சிரமமாக இருப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் தற்போது அங்கு நுகர்வோர் வருகை குறைந்துள்ளதாகவும், பழைய சந்தைக்கு வந்த நுகர்வோரில் பெரும்பாலானோர் வசதிகளைக் கருத்திற்கொண்டு மந்திகை மரக்கறிச் சந்தைக்கு செல்வதினால் பழைய சந்தைக் கட்டிடத் தொகுதியிலிருந்து பெற்ற வருமானத்தினை விட ரூபா 2000 வரையில் குறைவாகவே வருமானம் கிடைப்பதாகவும், இதனால் கீழ்த்தளத்திற்கு மரக்கறி விற்பனை பகுதியினை மாற்றித் தரும்படியும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், அவ்விடத்திற்கு வந்த நகர சபைத் தவிசாளர் சபா.ரவீந்திரன், போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த தவிசாளர்,

'உங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில்தான் நீங்கள் வியாபார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அத்துடன், இந்த சந்தைக்கட்டிடத்திற்கு மேற்கு புறமாகவுள்ள காணி விற்பனையாகவுள்ளது. அதனை நகரசபை கொள்முதல் செய்து அதில் உங்களுக்கு சந்தை அமைத்துதரவுள்ளது. அதுவரையிலும் நீங்கள் இந்தச் சந்தைக் கட்டிடத் தொகுதியின் மேற்தளத்தில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்'  என தெரிவித்தார்.

இதற்கு வியாபாரிகள் மறுப்புத் தெரிவித்தனர். தங்கள் பெண்களாக இருப்பதனால் அடிக்கடி மாடி ஏறி வருவது கஷ;டமாகவுள்ளதாகவும் இதனால் பழைய சந்தையில் வியாபாரத்தினை மேற்கொள்ள விடுமாறும் தவிசாளருக்குத் தெரிவித்தனர்.

இதற்கு நகர சபை உடன்படாத நிலையில் காலை 8 மணிமுதல் போராட்டத்தினைத் தொடர்ந்து நடத்தி வந்த வியாபாரிகள் 11 மணியளவில், விற்பனைக்காகக் கொண்டு வந்த மரக்கறிகளை விற்பனை செய்யவேண்டும் என்ற நோக்குடன் புதிய சந்தைக் கட்டிடத் தொகுதிக்கு கீழுள்ள வீதியோரமாக வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த சந்திப்பில் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வடமராட்சி ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி அலுவகத்தின் பொறுப்பதிகாரி ஐயத்துரை ரங்கவேஸ்வரன், பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .