2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

மலசலகூடத்தில் குழந்தையினை பிரசவித்து விட்டு சென்ற பெண் கைது

Super User   / 2014 ஜனவரி 26 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் மலசலகூடத்தில் நேற்று குழந்தையினைப் பிரசவித்து அதனை கைவிட்டுச் சென்ற 32 வயதுடைய பெண்ணொருவரை கைது செய்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

குழந்தை ஐந்து மாதத்தில் பிறந்தமையினால் இறந்து பிறந்துள்ளதாகவும் அச்சுவேலி பொலிஸார்  தெரிவித்தனர்.அச்சுவேலி வைத்தியசாலைக்கு கடந்த வெள்ளிக்கிழமை வந்த குறிப்பிட்ட பெண் காய்ச்சல் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று அவர் வைத்தியசாலையின் மலசலகூடத்தில் குழந்தையொன்றை பெற்றெடுத்து அதனை மலசலகூட குழியினுள் போட்டுவிட்டுச் சென்றுள்ளார். இதனை அவதானித்த வைத்தியசாலை நிர்வாகத்தினர் உடனடியாக அச்சுவெலி பொலிஸாரின் கவனத்திற்கு இதனைக் கொண்டு வந்துள்ளனர்.

இதனால் குறித்த பெண் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.  'தான் ஒரு வீடியோ கடையொன்றில் பணிபுரிந்ததாகவும், அந்த கடையின் உரிமையாளருக்கும் தனக்கும் ஏற்பட்ட தகாத உறவு காரணமாக இந்த குழந்தை உருவானதாகவும் குறித்த விசாரணையின் போது தெரிவித்தார்' என  அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

கருவினைக் கலைப்பதற்காக தான் சட்டவிரோத சிகிச்சைகள் மேற்கொண்ட நிலையில் அக்குழந்தை ஐந்து மாதத்திற்குள் இறந்த நிலையில் பிறந்துள்ளதாக அப்பெண் விசாரணையின்போது குறிப்பிட்டார். அத்துடன், தான் ஏற்கனவே திருமணமாகி கணவனைப் பிரிந்து வாழ்வதாகவும் தெரிவித்திருந்தார்.

இவர் தற்போது சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இறந்த குழந்தை யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அச்சுவேலிப் பொலிஸார் குறிப்பிட்டனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .