2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

அடிப்படை வசதிகள் கோரி அம்பன் கிழக்கு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2014 ஜனவரி 30 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கர்ணன்


அடிப்படை வசதிகள் எதுவுமின்றி வாழ்க்கையினைத் தொடர முடியாதிருப்பதாகத் தெரிவித்து வடமராட்சி அம்பன் கிழக்குக் கிராம மக்கள், குடத்தனையில் அமைந்துள்ள மருதங்கேணி பிரதேச செயலகத்தின் உப அலுவலகம் முன்னால்; கவனயீர்ப்புப் போராட்டமொன்றினை நேற்று (29) முன்னெடுத்தனர்.

அம்பன் சிவனொளி விளையாட்டுக் கழகத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில் 50இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். 'குப்பி விளக்கு தான் எமது வாழ்க்கையா,', 'களிமண் வீதியில் கூட நடக்க நாம் தகுதியற்றவர்களா?', 'அம்பன் கிழக்கு அபிவிருத்தியில் தவிர்க்கப்பட வேண்டிய பிரதேசமா?', 'பிரதேச சபை எம் விடயத்தில் அலட்சியமா? சோம்பலா? நித்திரையா? அல்லது செத்துவிட்டதா?' போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு இம்மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில், மருதங்கேணி பிரதேச செயலக நிர்வாக உத்தியோகஸ்தர் கே.கணேசமூர்த்தியிடம் தங்களின் 8 கோரிக்கைகள் அடங்கிய மகஜரினையும் அம்பன் கிராம மக்கள் கையளித்தனர்.

அந்த மகஜரில் வீட்டு வசதி, மலசலகூட வசதி, குடியிருப்பு வீதி, மின்சாரம், கடற்கரைக்குச் செல்லும் வீதி, கிணறு வசதிகள், விளையாட்டு மைதானம், வாழ்வாதார உதவிகள் உள்ளிட்ட கோரிக்கைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேற்படி கிராமம் கடந்த 2011ஆம் ஆண்டு மீளக்குடிமர்த்த அனுமதிக்கப்பட்டதுடன், தற்போது அங்கு 42 குடும்பங்கள் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .