2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

ஐ.நா செல்லமாட்டேன்: சி.வி

Kanagaraj   / 2014 பெப்ரவரி 12 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா

ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்ளமாட்டேன் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் இன்று தெரிவித்தார்.

நோர்வே தூதுவருடனான சந்திப்பினையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அடுத்தமாதம் நடைபெறவுள்ள ஜெனீவா கூட்டத்தொடரில் வடக்கின் முதலமைச்சர் என்ற ரீதியில் கலந்துகொள்வீர்களா? என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்,

இதற்குப் பதிலளித்த முதலமைச்சர்,

'ஐ.நா மனித உரிமைக்கூட்டத் தொடரில் கலந்துகொள்ளமாட்டேன். அத்துடன், செல்லவேண்டிய அவசியமும் எனக்கில்லை. நான் வடக்கின் நிர்வாகம் சார்ந்த செயற்பாடுகளை கவனித்து வருகின்றேன். அரசியல் சம்பந்தமான நடவடிக்கைகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனித்து வருகின்றார்கள். இதனால் அவர்கள் ஜெனீவா செல்வார்கள். அத்துடன், பெண்கள் சார்பில் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஜெனீவாக் கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன' என்று அவர் தெரிவித்தார்.

தென்மராட்சி வரணி மத்திய கல்லூரியின் 60 ஆண்டு நிறைவு விழாவில் நீங்கள் ஆற்றிய உரை தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியினால் விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன' இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது,

'இவ்வாறு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகங்கள் வாயிலாக நான் அறிகின்றேன். எனினும் இதுவரையில் இந்த விசாரணைக்குழு பற்றி எனக்கு எந்தவிதமான அறிவிப்புக்களும் விடுக்கப்படவில்லை. நான் உரையாற்றும் போது எழுதி வைத்தே உரையாற்றுவது வழமை. சில நேரங்களில் சில விடயங்களை நான் எழுத்தில் இல்லாமல் பேசுவேன்.

குறித்த விடயம் தொடர்பில் சட்டத்திற்கு முரணான வகையில் நான்  ஏதாவது கருத்துக்கள் முன்வைத்திருந்தால் என்மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம். அவ்வாறு விசாரணைக்குழு வரும் போது அதனைப் பார்த்துக் கொள்ளலாம்' என அவர் மேலும் தெரிவித்தார்.

தென்மராட்சி வரணி மத்திய கல்லூரியின் 60 ஆண்டு நிறைவு விழா கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. போது அதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட முதலமைச்சர் 'கர்மவினை எவரையும் விட்டுவைக்காது. நாம் முன்னர் செய்த கருமங்களுக்கு இப்போது பலனை அனுபவிக்கின்றோம். சர்வாதிகாரிகளாக இருந்த எகிப்தின் முபாரக், ஈராக்கின் சதாம் ஹுசைன், பாகிஸ்தானின் முஷாரப் ஆகியோர் இருந்த நிலை என்ன என்பதையும் இறுதியில் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதையும் உணர்ந்து கொள்ளவேண்டும்' என உரையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .