2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

கவனயீர்ப்பு போராட்டத்திற்கு நாம் ஆதரவு:த.தே.ம.மு

Kogilavani   / 2014 பெப்ரவரி 14 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று யாழ். முனியப்பர் கோவில் முன்றலில் நாளை சனிக்கிழமை (15) காலை 10.00 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பூரண ஆதரவு வழங்குவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பான ஊடக அறிக்கை ஒன்று செ.கஜேந்திரனால் நேற்று (13) வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'மேற்படி போராட்டம் காணாமற்போனவர்கள் தொடர்பாக பொறுப்புக்கூறலை வலியுறுத்தியும், இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், நில அபகரிப்பை தடுத்து நிறுத்துதல், மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காணுதல் உள்ளிட்ட மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பூரணமான ஆதரவை வழங்குவதுடன், அனைத்து மக்களையும் இப்போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

இடம்பெயர்ந்தவர்களது மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி அம்மக்கள் இப்போராட்டத்தில் கலந்து கொள்வதனை தடுப்பதற்காக அரச தரப்பு தனது இராணுவ இயந்திரம் ஊடாக கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் மக்கள் அரசினதும், இராணுவத்தினதும் அச்சுறுத்தல்களுக்கு அஞ்ச வேண்டாமெனவும், அவர்களது பசப்பு வார்த்தைகளை நம்பி ஏமாறாது போராட்டத்தில் கலந்து கொண்டு போராட்டம் வெற்றிகரமாக இடம்பெற ஒத்துழைக்குமாறும் மக்களை கேட்டுக் கொள்கின்றோம்' என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

யாழ்.மாவட்ட கிராமிய உழைப்பாளர் சங்கமும் ஒத்துழைப்பு

இந்த போராட்டத்திற்கு யாழ்.மாவட்ட கிராமிய உழைப்பாளர் சங்கமும் ஒத்துழைப்பு வழங்குவதாக யாழ்.மாவட்ட கிராமிய உழைப்பாளர் சங்கத்தின் செயலாளர் ரி.ஜெயசித்திரா இன்று தெரிவித்தார்.

யுத்தத்தில் காணாமற்போனவர்கள் தொடர்பான விடயங்களைத் தெளிவுபடுத்த வேண்டும் என்பதற்காகவும், 24 வருடங்களுக்கு மேலாக சொந்த நிலங்களில் குடியமர்த்தப்படாமல் இன்றும் நலன்புரி நிலையங்களில் அடிப்படை உரிமை மறுக்கப்பட்டு வாழும் வலி.வடக்கு மக்களுக்காகவும், இழுவைப்படகு மீன்பிடியினால் வடபகுதி மீனவர்கள் பாதிக்கப்படுவதினை நிறுத்தக்கோரியும், காணி சுவீகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், விலைவாசி ஏற்றத்தால் நாளாந்த வாழ்வின் நெருக்கடிக்குள்ளாக்கப்படும் மக்கள் சார்பாகவும் இந்தப் போராட்டம் நாளை முன்னெடுக்கப்படவுள்ளது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .