2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

நீங்களும் காணாமற் போயிருப்பீர்கள் : சாட்சியம்

Kanagaraj   / 2014 பெப்ரவரி 15 , பி.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சொர்ணகுமார் சொரூபன், வி.விஜயவாசகன்)

'எனது இரண்டு மகன்களும் காணாமற்போன நேரம் நீங்களும் (விசாரணைக்குழுவினர்) இங்கு இருந்திருந்தால் இந்நேரம் காணாமற்போய் காணாமற்போனோர் பட்டியலில் இணைந்திருப்பீர்கள் என்று' தனது இரண்டு பிள்ளைகள் காணாமற்போனமை தொடர்பில் சாட்சியமளித்த சாவகச்சேரியினைச் சேர்ந்த முருகன் தெரிவித்தார்.

காணாமற்போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் முன் சாட்சியமளிக்கும் நடவடிக்கை வெள்ளிக்கிழமை  யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.   கோப்பாய் பிரதேச செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த சாட்சியமளிக்கும் நடவடிக்கை தொடர்ந்து சாவகச்சேரியில் நேற்று நடைபெற்றது.

காணாமற்போனோர் தொடர்பில் சாட்சியமளிக்க வந்திருந்தவர்களில் பெரும்பாலானோர் மனைவி தனது கணவரை, அல்லது தாய் தனது மகன்கள் தொடர்பாக அதிகமாக சாட்சியமளிக்க வந்திருந்தனர். இந்நிலையில் காணாமற்போன முருகன் சிவராஜா, முருகன் ஜெயரட்ணம் என்ற தனது இரண்டு மகன்கள் சார்பாகவும் சாட்சியமளிக்க முருகன் என்ற முதியவர் வந்திருந்தார்.

அவர் சாட்சியமளிக்கையில்,

'எனக்கு 5 பிள்ளைகள் இருக்கின்றனர். அவர்களில் இரண்டு ஆண்பிள்ளைகள் அவர்கள் இருவரும் வயலில் அவர்கள் வேலை செய்து கொண்டிருந்த 1996 ஆம் ஆண்டு 7 ஆம் மாதம் 19 ஆம் திகதி இடம்பெற்ற சுற்றிவளைப்பின் போது இராணுவத்தினரால் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களை மீட்க நான் தேடாத இடங்கள் இல்லை. இருந்தும் எனக்கு என் மகன்கள் கிடைக்கவில்லை. நானும் ஒரு கூலி வேலை செய்து பிழைப்பவன் பிழைப்பினைப் பார்ப்பதா? எனது ஏனைய மூன்று பிள்ளைகளையும் பார்ப்பதா அல்லது எனது காணாமற்போன 2 மகன்களைத் தேடுவதா என வினவினார்.

இதன்போது குறுக்கிட்ட ஆணைக்குழுவினர் ' உங்கள் மகன்களை பிடித்துச் சென்ற இராணுவத்தினரை அடையாளங்காட்ட முடியுமா எனக்கேட்டனர்.

அதற்குப் பதிலளித்த முதியவர் ' போங்கய்யா, என்ர பிள்ளைகள் பிடிக்கப்பட்டு எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன. இன்று வரை என்னால் எவ்வாறு அந்த இராணுவத்திரை ஞாபகம் வைத்திருக்க முடியும். எனக்கும் வயதாகிவிட்டது. இதேமாதிரியாக பல தடவைகள் பல இடங்களில் கேட்டுவிட்டார்கள். நீங்களும் இதேதான் கேட்கின்றீர்கள் இருந்தும் என் பிள்ளைகள் மட்டும் எனக்குக் கிடைக்கவில்லை. ஒன்று மட்டும் சொல்கின்றேன். நீங்கள் மட்டும் அந்த நேரம் இங்கு இருந்திருந்தால் அன்றைக்கு நீங்களும் காணாமற்போயிருப்பீர்கள்' என்றுகூறிவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.

தேவாலயத்தில் வைத்து எனது அண்ணாவையும் மேலும் 23 பேரையும் கொண்டு சென்றனர்

நாவாற்குழியில் 1996 ஆம் ஆண்டு 7 ஆம் மாதம் 19 ஆம் திகதி துமிந்த என்கிற இராணுவ அதிகாரியின் தலைமையில் நடைபெற்ற சுற்றிவளைப்பின் போது, தேவாலயத்திலிருந்த எனது அண்ணன் மற்றும் மேலும் 23 பேரை இராணுவத்தினர் கொண்டு போனர்.  ஆதற்கு பின்னர் அவர்கள் தொடர்பில் எந்த தகவல்களும் இல்லi என காணாமற்போன பிரேமதாஸ் ஸ்ராலின் ஜீவாவின் தங்கையான பிரேமதாஸ் ஜுவா சாட்சியமளித்தார்.

எனது அண்ணாவை பிடித்துச் செல்லும் போது அவருக்கு 24 வயது. எனது அண்ணனும் தேவாலயத்தில் பிடிபட்ட மற்றவர்களுக்கும் விடுதலைப்புலிகளும் எவ்வித தொடர்பும் இல்லை. எல்லோரையும் நான் நன்கு அறிவேன். இது தொடர்பாக பல அமைப்புக்களிடம் சென்று இது வரையிலும் எனது அண்ணா எனக்கு கிடைக்கவில்லை என்று கண்ணீரினை முற்றுப்புள்ளி ஆக்கி முடித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .